விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது : அற்புத விளக்கும் எம்மிடமில்லை என்கிறது அரசாங்கம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரசியல் நோக்கிற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதுவுமில்லை. இரண்டு வருட காலம் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் ஏனைய பிரச்சினைகளுக்கும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

டொலர் பிரச்சினையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்த அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த நாட்களில் பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி தட்டுப்பாடு ஏற்படாது.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அதனை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.