வீடுகள் விற்கப்பட்டதில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாயாகும்.

இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள்.

ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, முதலாவது வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது 11 வீடுகள் டொலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வீடுகள் பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது.

தற்போது இந்த ​​அடுக்குமாடி குடியிருப்பில் 2 படுக்கையறைகள் கொண்ட வீடுகள் முற்றாக விற்றுவிட்டதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

டுபாய், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஓமான் கத்தார் மற்றும் பிஜி தீவுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளனர்.

வீடுகளுக்குரிய பணத்தை மொத்தமாக செலுத்துவதால் 10 சதவீதம் விலைக்கழிவும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.