வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசகர் உட்பட இருவரை நெடுங்கேணி பொலிஸார் நேற்று கைது செய்தனர். தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வெடுக்குநாறி மலையில் ஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள் கடந்த மார்ச் 26ஆம் திகதி உடைத்தெறியப்பட்டன. அங்கு கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நீதிமன்ற அனுமதியுடன் விக்கிரகங்கள் மீள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
மீள் பிரதிஷ்டையின் போது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை ஆலய பூசாரியை யும் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்
இவர்கள் இருவரும் நேற்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசாரியும் இருப்பதனால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்கு முரணாக அமையும் என்று நீதிவான் சுட்டிக் காட்டி அவர்களை விடுதலை செய்தார். எனினும், ஆலயத்தில் கட்டுமானங்களையோ அல்லது மாற்றங்களையோ ஏற்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்ததுடன், பூசை வழிபாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் அனுமதித்தார்.
இதேநேரம், ஆலயத்தின் இறை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில் மூத்த சட்டத்தரணி தி. திருவருள் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.