வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டமை சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (28.03.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடகிழக்கினை சிங்கள பௌத்த மயமாக்கும் அடவாடி பயங்கரவாத தொல்பொருள் திணைக்களத்தோடு வேரும் பயங்கரவாத இன அழிப்பு அரசியல் சக்திகள் தமிழர்களின் தேசியத்தை சிதைக்க களமிறக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ச்சியாக சைவர்களின் வழிபாட்டுத் தலங்களை சிதைப்பதும் பக்தி சின்னங்களை உடைத்தடிப்பதும் தீவிரபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே வவுனியா வெடுக்குநாறி மலை சைவ ஆலயம் சிதைக்கப்பட்டுள்ளது. இது சைவ மக்களை பலவந்தமாக வன்முறைக்கு இட்டு செல்லும் திட்டமிட்ட இனவாத அரசியலாகும். இதனை வன்மையாக கண்டிப்போடு இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அரசியல் சக்திகளையும் தமிழ் அரசியல் தலைமைகளும், சமய தலைமைகளும் வெளிப்படுத்தாவிடின் இன்னும் ஒரு பயங்கர அரசியல் முள்ளிவாய்க்கால் அழிவை சந்திக்க வேண்டி ஏற்படும்.
ஏற்கனவே மன்னர் பிரதேசத்தில் நீண்ட காலமாக சைவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் பிரச்சனை நிலவுகின்றது. இதனை சரியான வகையில் கையாள்வதற்கும் தீர்பதற்கும் சமய தலைமைகள் தவறியுள்ளனர். அரசியல் தலைமைகளும் பாராமுகமாக உள்ளனர். நீறு பூத்த நெருப்பாக காணப்படும் இப் பிரச்சினையை தொடர்ந்து நீடிப்பதற்கு சமய தலைமைகள் இடம் கொடுக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
வடகிழக்கினை சிவ பூமியாக சித்தரிக்கும் வேலை திட்டத்தின் ஓர் அங்கமாக ஆனையிறவில் நடமாடும் சிவன் உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. அன்று ஆனையிறவை விடுதலைப் புலிகள் உயிர் தியாகத்தோடு கைப்பற்றிய போது இருந்த மகிழ்ச்சி நடமாடும் சிலை வைக்கப்பட்ட போது ஏற்படவில்லை. வடகிழக்கில் எந்தவொரு பாரிய சலசலப்பையும் ஏற்படுத்தவுமில்லை. இதற்கு மத்தியில் திருவள்ளுவர் இந்துவா? இல்லையா? எனும் பட்டிமன்றமும் நீண்டு செல்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் யுத்த வெற்றியை மீண்டும் அடையாளப்படுத்தும் முகமாக முப்படைகளின் தளபதி சவேந்திர செல்வா தாது கோபுர திரை நீக்கத்திற்கு சிங்கள நடனத்தோடு அழைத்து வரப்படுகின்றார். இதன் தொடர்ச்சியாகவே கச்சைதீவில் களவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இது சைவர்களை தனியாகவும், கிறிஸ்தவர்களை தனியாகவும், தமிழர்களின் தேசியம் காக்கும் அரசியல் கதைப்போரை தனியாகவும் பிரித்துவிட்டு அரசியல் குளிர்காயும் தந்திரமும் ஆகும்.
இன்னொரு பக்கம் இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் தமது பாதுகாப்புக்காக இந்தியாவை அரவணைப்பை ஏற்றுக் கொள்ள வைக்கும் மனநிலையை தூண்டுவதோடு இந்தியாவின் தலையிட்டால் 13 ஏற்றுக்கொள்ள வைக்கும் அரசியல் சதியும் இதன் மூலம் அரங்கேறலாம்.
இதேவேளை இன மற்றும் மதவாத காவலர்களாக செயல்படும் நாடளுமன்ற உறுப்பினர்கள் தமது தீ நாக்கை நீட்டி உள்ளனர். சரத்வீரசேகரா”சமய பயங்கரவாதம் வடகிழக்கில் தலை தூக்கி உள்ளது”என்று கூறியுள்ளதோடு விமல் வீரவம்ச
” நாடு சிங்கள பௌத்தர்களுக்கே சொந்தமாகும். தமிழர்களுக்கும் இந்த நாட்டில் ஒரு அங்குல நிலமும் இல்லை”என கூறியுள்ளார்.
இது தமிழர்களுக்கு எதிரான அரசியல் சதித்திட்டமாகும். தமிழர்கள் தமிழ் தமது பாதுகாப்புக்காக இந்தியாவையும் 13 யும் நாட அதற்கு எதிராக தெற்கை தூண்டிவிடும் நரி தந்திரமாகும்.
ஆதலால் வடகிழக்கு மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் அரசியல் தெளிவோடு சமய தலைவர்களையும் இணைத்துக் கொண்டு அரசியல் பயணம் மேற்கொள்ளல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தை கூட்டாக பற்றிக் கொள்ளவில்லையெனில் தமிழர்கள் இன்னும் ஒரு அழிவையே சந்திப்பார். இதற்கு அரசியல் மற்றும் சமய தலைவர்கள் இடம் கொடுக்கக் கூடாது என்பதே எமது வேண்டுகோள்.