நிதானமான தந்திரோபாய அரசியலே தற்போதைய உலக நீரோட்டத்தில் நகர்வுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமானசபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழர் வரலாற்றில் உணர்ச்சி அரசியல் என்பது தற்போதைய சூழலில் அவசியமற்றது. காரணம், கடந்தகால தமிழர் அரசியல் உணர்ச்சிவச பேச்சுக்களாலும் கோசங்களாலும் கட்டி எழுப்பப்பட்டத்தை மிதவாத அரசியலும் விடுதலைப் போராட்ட அரசியலும் வரலாறாய் பதிவு செய்துள்ளன.
அவற்றின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நிதானமான தந்திரோபாய அரசியலே தற்போதைய உலக நீரோட்டத்தில் நகர்வுகளுக்கு ஏற்ப ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது. கோசங்களும் உணர்ச்சிவச பேச்சுக்களும் தனிப்பட்ட கட்சி நலன்களுக்கும் தனிமனித அடையாளங்களுக்கும் பயன்படுமே தவிர இனத்தின் அபிலாசைகளை வென்றிட தந்திரோபாய வழிகாட்டுதல்களுக்குத் தடையாகவே அமையும்.
மாறாக இனவாத பூதத்தை வளர்க்கவும் பௌத்த சிங்கள பேரினவாதம் விரிவடைவதற்கான தீனியாகவும் தமிழ் இனத்தை பெரும் தேசியவாதம் தொடர்ந்து அழிப்பதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். ஈழத் தமிழர்களுக்கு அவர்களின் வாழ்விட பூகோள அமைவிற்குப் பிராந்திய வல்லரசின் அரசியலைத் தாண்டி பூகோள அரசியல் எதனையும் பெற்றுத் தர மாட்டாது.
இது 1833 ஆண்டிலிருந்து இன்றுவரை வரலாறு சொல்லும் உண்மை விடுதலைப் போராட்ட இயக்கம் ஆயுத பலத்துடன் இருந்த போதும் பிராந்திய சக்தியை எடுத்தெறிந்து விமர்சித்தது இல்லை.
மாறாக எந்தவித பலம் அற்ற குறைந்த மக்கள் ஆதரவைக் கொண்ட ஒரு கட்சித் தரப்பு எல்லை தாண்டி விமர்சித்தல் தந்திரோபாய நகர்வுகளுக்குக் குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.
ஆகவே பூகோள அரசியல் கடந்த காலத்தில் தமிழர் தரப்பைப் பயன்படுத்தி தங்களின் நலன்களைப் பூர்த்தி செய்ததுடன், தமிழர்களின் அபிலாசைகளை வெல்வதற்கான வழிகளையும் இல்லாது செய்தன. உதாரணமாக ஆரம்பத்தில் தமிழர்களை விட எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டார நாயக்க சமஷ்டி தொடர்பாக முதலில் தீவிரமாகப் பேசினார்.
குறிப்பாகக் கண்டி, கரையோரம், வடக்கு, கிழக்கு என மூன்று அலகுகளாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனப் பிரசாரம் செய்தார். ஆனால் அப்போது இருந்த பிரித்தானிய ஆளுநர் டொனமூர் இந்தியாவை இலகுவாகக் கையாள்வதற்காகக் கண்டி மற்றும் கரையோரச் சிங்களவர்களை ஒன்றாக இணைத்து அவர்களிடமே ஆளும் அதிகாரங்களை வழங்கினார். வேறு பல உதாரணங்களையும் கூற முடியும்.
ஆகவே ஈழத் தமிழர்கள் பிராந்திய அரசியலை தந்திரோபாயமாக கையாள தவறினால் எதிர்காலத்தில் ஆபிரிக்கா கண்டத்தில் பல தேசிய இனங்கள் ஆக்கிரமிப்பில் கரைந்து சென்றது போல ஈழத்திலும் அவ்வாறான அவலம் ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.