யாழ். மாநகர சபை சில வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி கழிவுகளை அகற்றி வருகிறது.
கொழும்பில் இடம்பெறுவதைப் போன்று யாழ்ப்பாணத்திலும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு நான்கு பெரிய வாகனங்களை இலவசமாக வழங்க 2019 ஆம் ஆண்டு ஜப்பான் முன்வந்தது.
வாகனங்கள் இலவசமாக கிடைக்கவிருந்த நிலையில், அதனை இலங்கைக்கு கொண்டுவரும் போது அதற்கான வரியை யார் செலுத்துவது என்ற பிரச்சினை எழுந்தது.
அதற்கான வரியையும் தாமே செலுத்துவதாக ஜப்பான அரசாங்கம் அறிவித்து, அந்த தொகையையும் யாழ். மாநகர சபை கணக்கிற்கு அனுப்பியது.
இது தொடர்பான ஒப்பந்தம் யாழ்ப்பாண மாநகர சபைக்கும் ஜப்பானுக்கும் இடையில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது யாழ். மாநகர சபை முதல்வராக இம்மானுவேல் ஆர்னால்ட் இருந்துள்ளார்.
ஜப்பானில் இருந்து குறித்த நான்கு வாகனங்களையும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான இறக்குமதி வரி மற்றும் போக்குவரத்து செலவாக ஜப்பானிய அரசாங்கம் அன்றைய காலப்பகுதியில் 83,432 அமெரிக்க டொலர்களை யாழ். மாநகர சபையின் வங்கிக் கணக்கில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி வைப்பிலிட்டதாக அதன் சுகாதாரக் குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.
வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் (Department Of External Resources)அனுமதி இல்லாமல் நிதிகளை வௌி இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், அதன் அனுமதியை பெறுமாறு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியதாக வரதராஜன் பார்த்திபன் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்திற்கு யாழ். மாநகர சபையினால் கடிதம் எழுதப்பட்ட போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என வரதராஜன் பார்த்திபன் மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் ஜப்பானிய அரசாங்கத்திற்கும் தற்போதைய மாநகர சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதும் கழிவகற்றல் வாகனங்களுக்காக வழங்கப்பட்ட நிதி தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது, மூன்று மாத திட்டத்தின் அடிப்படையில் தான் அந்நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது 3 வருடங்கள் கடந்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்ட ஜப்பான் உயர் அதிகாரிகள், அந்நிதியை மீள செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய அரசாங்கம் எழுத்து மூல கோரிக்கை அடிப்படையில் அந்த நிதியினை விடுவிப்பதற்கான அனுமதியினை யாழ். மாநகர சபைக்கு வழங்கியுள்ளது.
வரியை செலுத்த ஜப்பான் அன்று வழங்கிய 83 ,432 அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி 30.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.
இது தொடர்பில் யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னால்டிடம் வினவிய போது, தானே இந்த திட்டத்தை முன்நின்று ஆரம்பித்ததாகவும் தனக்குப் பின்னர் மாநகர சபை இந்த திட்டத்தை உதாசீனம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கமே இதற்கு முட்டுக்கட்டையாக இருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வௌிநாட்டு வளத்துறை திணைக்களத்திடம் வினவிய போது, தமக்கு இவ்வேளையில் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தால் தகவலைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.
எது எவ்வாறாக இருந்தாலும், யாழ். மாநகர சபைக்கு இலவசமாக கிடைக்கவிருந்த மில்லியன் கணக்கான பெறுமதியுடைய இந்தத் திட்டம் இரத்து செய்யப்பட்டு, பணத்தை மீள செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.