இலங்கையின் தேசிய விமான சேவைகள் நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தை தனியார்மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமே இருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் நட்டம் ஈட்டும் நிறுவனமாக இருந்து வருகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மொத்தக் கடன் 1.126 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இது ஏறக்குறைய 401 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.