வடக்கு, கிழக்கில் நாளை 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு அம்பாறை மாவட்ட தமிழ் – முஸ்லிம் மக்கள் முழு ஆதரவையும் வழங்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ரெலோ அமைப்பின் உப தலைவரும், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்ரி மகேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இதனை வலியுறுத்தியுள்ளதுடன், குறிப்பாக தமிழ் மக்களுடன் இணைந்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களும், வர்த்தகர்களும் இந்த ஹர்த்தால் கடையடைப்பு வெற்றி பெற ஆதரவு தர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புக்களும் மற்றும் தொழிற் சங்கங்களும் இணைந்து மேற்படி பூரண ஹர்த்தால், மற்றும் முழுக் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அனைத்து இன மக்களையும் வதைக்கக் கூடிய படுமோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் நாளை (25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட விருப்பதை ஆட்சேபிக்கும் பிரதான விடயம் உட்பட பல்வேறு அரசின் தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அடக்கு முறைகள், உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டித்தும் இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஹர்த்தால், கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவுகோரி அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் நேற்று (23) உப தலைவர் ஹென்ரி மகேந்திரன் தலைமையிலான குழுவினர் பரப்புரைகளை முன்னெடுத்தனர்.
இதனோடு ஹென்ரி மகேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களை வதைத்து வரும் நிலையில் தற்போதய ரணில் தலைமையிலான அரசு அதைவிடவும் மோசமான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைந்துள்ளது.
தமிழ் மக்கள் மட்டுமன்றி சகல இன மக்களதும் அடிப்படை உரிமைகளைக் கேள்விக் குறியாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை, ஊடகங்களின் குரலை நசுக்கி, அடிப்படை உரிமைகளை மறுதலிக்கும் அச்சட்டத்தை வடக்கு, கிழக்கு மக்கள் முற்றாக நிராகரிக்கின்றோமென்பதை அரசிற்கு வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை பௌத்த, சிங்கள, இராணுவமயமாக்கும் அரசின் நிகழ்ச்சி நிரலை உடன் நிறுத்தக்கோரியும்,
இனப்பிரச்சினை மற்றும் எம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென வலியுறுத்தியும் நாளைய ஹர்த்தால் கடையடைப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
எனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல தமிழ், முஸ்லிம் மக்களும் வர்த்தகர்களும் இதில் இணைந்து ஆதரவு நல்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகளை மூடியும், கடைகளை அடைப்பதுடன், போக்குவரத்து சேவைகளை நிறுத்துமாறும் கோருகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.