COVID-19 நிதியத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.
COVID கட்டுப்பாட்டிற்காக நன்கொடையாளர்களால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது COVID நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், அந்த நிதியை சுகாதார தேவைக்காக பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுகாதார துறையில் துரிதமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் குறித்து, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
வைத்தியசாலைகளுக்கு தேவையான 234 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதுடன், உலக சந்தையில் மருந்துப்பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதற்கு தேவையான மூலப்பொருட்களை இந்திய கடனுதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது தௌிவுபடுத்தியுள்ளார்.
ஒயாமடுவ மற்றும் ஹொரணை – மில்லவ பகுதிகளை மையப்படுத்தி மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருந்து உற்பத்தி நடவடிக்கைகளை எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், 200 வகையான மருந்துகளை தயார் செய்வதற்குரிய உற்பத்தித்திறன் குறித்த பகுதிகளில் காணப்படுவதாகவும் அதிகாரிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.