13ஆவது திருத்தச்சட்டம் தோல்வி கண்ட பொறிமுறை – தேசிய மக்கள் சக்தி

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முற்பட்டால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கக்கூடும்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்குக் கிடையாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை. எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும். நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர். எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13 ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும். புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சமூகமாக வாழ முடியும்.” – என்றார்.