13 அகற்றப்படுமாக இருந்தால் நாடு சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் செல்லும் – ஜனநாயகப் போராளிகள் கட்சி செயலாளர் – இ.கதிர்

13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் நிலைப்பாடு சம்மந்தமாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் அரசியல் யாப்பின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் தொடர்பாக அரசியற் கட்சிகளின் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றார்கள். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கிலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதே போன்று 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என் தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் மற்றும் மலையகம், முஸ்லீம் கட்சிகள் இணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்துரையாடி இருக்கின்றார்கள்.

இந்த 13வது திருத்தச் சட்டம் இலங்கையில் நடைமுறைக்குகக் கொண்டு வரப்பட வேண்டும் என தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. இது புதிய விடயம் அல்ல. இருப்பினும் தற்போதைய சூழலில் அது பார்க்கப்படுகின்ற விடயமாக இருக்கின்றது. அந்த விடயங்கள் தொடர்பாக கட்சிகள் கூடி ஆராய்ந்து வருகின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்;கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, 13வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்;கான தீர்வின் ஆரம்ப விடயம் என்பதைத் தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்றது.

இதில் 13வது திருத்தச் சட்டம் என்பது என்ன? அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது அதிலுள்ள சாதக பாதக விடயங்கள் என்ன? என்பதோடு இந்த விடயத்தில் எல்லோருடைய கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பிலும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.

உண்மையில் 13வது திருத்தச் சட்டம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்;தத்தின் ஒரு ஆணிவேராகவே பார்க்கப்படுகின்றது. இது இந்தியாவினால் இலங்கை மீது போட்டிருக்கும் ஒரு கடிவாளமாகவே இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் நிர்வாக அலகுகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழர்களைப் பொருத்தவரையில் ஆயத போhராட்ட காலத்திலும் சரி தற்போதும் சரி நாங்கள் எமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் ஆயுத ரீதியாகவும், தற்போது அரசியல் ரீதியாகவும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். நோர்வே ஒஸ்லோவில் இடம்பெற்ற தீர்மானம். திம்புவில் இடம்பெற்ற தீர்மானம் இவை இரண்டும் எமது ஆயுத போராட்ட காலத்தில இடம்பெற்றது. இவை இரண்டுமே பரஸ்பரம் நம்பிக்கையிழந்து செயழிழந்து நிற்கின்றது

நாங்கள் ஒவ்வொரு முயற்சிகளும் எடுக்கின்ற போது அக்காலத்தில் இதனால் எத்தகு விளைவுகள் எற்படும் என்பதனை ஆராய்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கேற்றவாறு எமது திட்டங்களை வகுத்து நாம் செயற்பட்டே வந்தோம்.

உண்மையில் ஒஸ்லோ உடன்படிக்;கையின் அடிப்படையில் ஒரு தீர்வினைப் பெறுவதற்கான முயற்சி நடைபெற்றது அது இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளாக உலக வல்லமை மிக்க நாடுகளின் அனுசரணையுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அந்தப் பேச்சுவார்தைக் காலங்களில் எல்லாம் தமிழர்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை அங்கீகரித்துக் காட்டக்கூடியவாறான செயற்பாடுகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இவ்வாறாக அழுத்தம் கொடுக்கவில்லை. இலங்கையின் ஏமாற்று வித்iதைகளை உலகம் நம்பி அந்த வழியில் பயணித்தமையால் அந்தப் பேச்சவார்த்தை அவ்வாறே கைநழுவிச் சென்றது.

அதேபோன்று, டோக்கியோ மாநாட்டிலே நாங்கள் பங்குபற்றினால் என்ன விளைவுகள் ஏற்படும் பங்குபற்றாமல் விட்டால் என்ன வளைவுகள் எற்படும் என்பதையும் நாங்கள் முற்கூட்டியே எமது தலைவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த நிலையிலே டோக்கியோ மாநாட்டிலே விடுதலைப் புலிகளின் சார்பில் யாரும் பங்கேற்காமல் போனதும் ஆயுத போராட்டத்தின் பின்னடைவிற்கு ஒரு காரணமாக அமைந்தது.

அதேபோன்று இன்றைய சூழலில் தமிழ் மக்களின் நலன் சார்ந்;த விடயங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மிகத் தெளிவாக விளங்கிச் செயற்பட வேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் நாங்கள் நம்பிக்கையோடும், உலகத்தின் அனுசரணையுடனும் பேச்சகளிலே ஈடுபட்டோம். தற்போது இந்த 13வது திருத்தச் சட்டத்தை இந்;தியாவின் அனுசரரணையுடன் முழுமையாகச் செயற்படுத்தவதற்கு தமிழக் கட்சிகள் முன்வந்து செயற்படுகின்றார்கள்.

தற்போது நாட்டில் ஆட்சியில் இருக்கின்ற இந்த அசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பது அல்லது அதனைச் செயலிழக்க வைப்பது போன்ற நடவடிகக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருகின்றது. அதற்காகத் தான் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு புதிய அரசியலமைப்பின் ஊடாக 13வது திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் எமது சுயநிர்ணயக் கொள்கை, தமிழர்களின் தேசியம் அனைத்தையும் மிக வேகமாக அழித்து இங்கே தமிழ் மக்களுக்கான தேசிய இனப்பிரச்சினை இல்லை என்பதை உலகத்திற்குக் காட்டி தமிழர் தாயத்தினை ஆக்கிரமித்து தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விடயங்களில் நாங்கள் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக பிடுங்கி எறியப்படுமாக இருந்தால் இலங்கை சீனாவின் பக்கம் முழுமையாகச் சாய்ந்து விடும். இந்;தியாவின் உதவியைக் கோரி நிற்கும் தமிழர் தரப்பு நிச்சயமாகத் தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்தைத் தாண்டி எம்மால் போக முடியாத நிலை இருந்தாலும். அதன் கீழ் போகாமல் 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி தேவையும் எமக்கு இருக்கின்றது.

இந்தத்திருத்தச் சட்டம் முழுமையாக அமைய வேண்டுமாக இருந்தால் அதற்குப் பிரதான பங்காளியாக இருக்க வேண்டியது இந்தியா. இந்தியாவின் நலன் சார்ந்த விடயங்களில் ஈழத்தமிழர்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக இந்தியா ஈழத்தமிழர்களின் நலனிலே மிகவும் அவதானமாகவும், நம்பிக்கையைப் பேணும் வகையிலும் செயற்பட வேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இருக்கின்ற எமது அதிகாரங்களையென்றாலும் தமிழர் தரப்பு கைப்பற்றக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. அந்த வகையில் தற்போதைய நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையே இங்கு இருக்கின்றது.

13ஐ நாங்கள் நிராகரிக்க முயற்சி செய்வோமாக இருந்தால் இந்தியாவினால் இலங்கை மீது போடப்பட்டிருக்கின்ற கடிவாளம் அறுத்தெறியப்படும். அதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நில ஆக்கரமிப்புகள், பௌத்த மயமாக்கல் திட்டங்கள் போன்ற அனைத்து விடயங்களும் மிக இலகுவாக இலங்கை அரசாங்கத்தினால மேற்கொள்ளப்படும்.

13ஐத் தாண்டி எமது மக்;களுக்கான உரிமைகளை வழங்குவதாக இலங்கையில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறிய கருத்து இந்த விடயங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதியில் சிங்களக் குடியேற்றம் முழுமையாக நிறைவேற்றப்படுமாக இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறையும், சிங்களப் பிரதிநிதிகள் அதிகமாகத் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பு உருவாகும். அந்த நிலைமை தோற்றுவிக்கப்பட்டதன் பின்னர் எவ்வகையான அதிகாரங்கள் வடக்கு கிழக்கிற்கு பகிரப்பட்டாலும் அது எமக்குத் தேவையற்றதாகவே அமையும்.

இன்று வடக்க கிழக்கில் சீனாவின் பிரவேசம், ஆதிக்கம், அபிவிருத்தி என்ற போர்வையில் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் போன்றன தொடர்பிலும் நாம் சிந்திக்க வேண்டும். இலங்கையில் தன்நிறைவுப் பொருளாதாரம் அமைவதற்கு சீனா ஒருபோதும் அனுமதிக்காது. விலை கொடுத்து இலங்கை நாட்டை வாங்கிக் கொள்வதற்காகவே சீனா முயற்சி செய்கின்றது. அந்த முயற்சியில் சீனா ஈடுபடுகையில் சீனாவைப் பயன்படுத்தி தமிழர்களுக்கெதிராக தங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற சிங்கள தேசம் அறிவிலித்தனமாக செயற்படுகின்றது.

உண்மையில் தமிழ் மக்களுக்கான தீர்வாக வடக்கு கிழக்கு இணைந்த தம்மைத் தாமே ஆளக்கூடிய ஒரு அலiகை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் எக்காலத்திலும் முயற்சி செய்ததும் இல்லை, முயற்சி செய்யப் போவதும் இல்லை. தமிழர்களுக்கு இவ்வாறானதொரு தீர்வுத் திட்டத்தைத்தான் வழங்கப் போகின்றோம் என்று சொல்லி தமிழர் தரப்பினை பேச்சுக்கு அழைத்ததும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைக்கு அமைய இலங்கை அரசாங்கத்தோடு வலுக்கட்டாயமாகவே பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

நீண்ட காலம் கிடப்பிலே கிடந்த இந்த 13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் இன்று கதைத்துக் கொண்டிருக்கின்றோம். 13வது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து ஒரு நேரிய பாதையிலே பயணித்தால் மாத்திரமே  அதனை நடைமுறைப்படுத்தலாம் என்ற விடயம் உணரப்பபட்டு இன்று சில முன்னெடுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெடுப்புகளும் மக்களை ஒரு குழப்பகரமான நிலைமைக்கு இட்டுச் செல்லுகின்றதே தவிர ஒருமித்து ஒரு கொள்கையின் அடிப்படையில் எமது மக்களைப் பயணிக்ககக் கூடியவாறான முன்னெடுப்புகளாக அமையவில்லை. நாங்கள் பல கூட்டங்களைக் கூடி கதைப்பதற்கு முன்னர் நாங்கள் எங்களை மாற்றிக் கொண்டு சரியான முடிவுகளை எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது.

தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு தமிழ்த் தேசித்திற்கு வெளியில் நின்று செயற்படுகின்ற கட்சிகளும், 13வது திருத்தச் சட்டம் தேவையற்ற விடயம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒருசாராரும் இருக்கின்றார்கள். 13வது திருத்தச் சட்டம் ஈழத் தமிழர் நலன்சார்ந்த விடயங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட விடயம் அல்ல என்பதைத் தெளிவாக நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

13வது திருத்தச் சட்டம் அகற்றப்படுமாக இருந்தால் நிச்சயமாக இலங்கைக சர்வாதிகார ஆட்சிமுறைமைக்குள் கொண்டு செல்லப்படும். பெரும்பானன்மை சமூகம் என்று சொல்லப்படுகின்ற சிங்கள தரப்புகளால் ஒருமித்த ஒரு ஆட்சியைக் கொண்டு வரலாம்.

பிரிக்கப்பட்ட மாகாணங்களில் காணி பொலிஸ் அதிகாரங்களை நிலை நிறுத்தியவாறு ஒரு அரசியலமைப்பில் சட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது என்று சொன்னால் தற்போதைய நிலைமையில் அதனை நாங்கள் ஏற்று முன்கொண்டு செல்ல வேண்டி நிலைமை தான் இருக்கின்றது. அது தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் ஒவ்வொரு அரசியற் தலைவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தற்பொது எங்களுக்கு இருக்கின்ற பலம் என்று சொல்லப்படுகின்ற அந்த விடயத்தை நாங்கள் எவ்வாறு கையாளமுடியும் என்று பார்;க்க வேண்டும். அதனைக் கொண்டு வந்து விட்டால் போதுமென்று இருக்காமல் அதனை எவ்வாறு எமக்குச் சாதமாக பலம்மிக்க நிருவாக அலகாக மாற்ற முடியும் என்பது பற்றிக் கலந்தாலோசித்து இந்திய அரசாங்கத்தோடு பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டு 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டு மக்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தையாவது தக்க வைத்துக் கொள்ளுகின்ற நிலைமையை இங்கு உருவாக்க வேண்டும்.

எந்தப் பலமும் இல்லாமல் நாங்கள் ஒரு விடயத்திற்குள் பயணிக்க நினைப்பது நிச்சயமாக எதிர்காலத்தில் மீண்டும் ஒரு அழிவினையே எற்படுத்தும். வரலாற்று ரீதியில் நாங்கள் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான விடயங்களில் அவதானித்துக் கொண்டே வருகின்றோம். எமது கருத்துகளும் செயற்பாடுகளும் ஒருமித்த பாதையில் ஒரே கொள்கையில் உண்மையாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.