13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுவதை இரத்தம் சிந்தியேனும் முறியடிப்பேன் – மேர்வின் சில்வா

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்தால், இரத்தம் சிந்தியேனும் அந்த முயற்சியை முறியடிப்பேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட கருத்து தொடர்பாக, இவ்வாறு கருத்து தெரிவித்த மேர்வின் சில்வா, நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு இரத்தம் சிந்த தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சஜித் பிரேமதாச 13வது திருத்தச் சட்டத்தை வழங்குவோம் என வடக்கில் சஜித் கூறுகின்றார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள எதனை அவர் வழங்கப் போகின்றார்?

காணி அதிகாரங்களை அல்லது பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறாரா, என்பதை அவர் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்த நாட்டில் வடக்கிற்கு தெற்கிற்கு என வெவ்வேறு அதிகாரங்கள் இருக்க முடியாது.

பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மத்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்க வேண்டும்.
மாறாக மாகாணங்களுக்கு இந்த அதிகாரங்கள் பகிரப்படக்கூடாது.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை நான் உயிரோடு இருக்கும் வரை அமுல்படுத்த விடமாட்டேன்.

அதையும் மீறி யாரேனும் 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள அதிகாரங்களை வழங்கினால், இரத்தம் சிந்தியேனும் வீதியில் இறங்கி அந்த முயற்சியை முறியடிப்பேன்.

சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாச அதிகளவான ஆயுதங்களை புலிகளுக்கு வழங்கியிருந்தார்.

இதனால் நூற்றுக் கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டனர். அது குறித்து நான் இங்கு பேசப் போவதில்லை” என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.