மாகாண சபைகளை எலும்புக்கூடுகளாக ஏற்றுக்கொள்ள நாம் தயாரில்லை. 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(19) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவுடன் இலங்கையின் உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதனை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இங்கு அழகாக தெளிவு படுத்தினார்.
எனவே அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்தினால் இந்தியாவுடனான நட்புறவை மேலும் நெருக்கமாக்க முடியும். இந்தியாவின் முழுமையான ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும்.
எனவே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும்படி அரசாங்கத்தை கோருகின்றோம். அதேவேளை 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.
மாகாணசபையை எலும்புக்கூடுகளாக நாம் ஒரு போதும் ஏற்க மாட்டோம். 13 ஆவது திருத்தத்திலுள்ள முழுமையான அதிகாரங்களுடன் மட்டுமே மாகாணசபையை நாம் ஏற்போம்.
மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களை அரசாங்கம் மீளப்பெற்றுவிட்டது.
எனவே அந்த அதிகாரங்களை அரசாங்கம் மீளவும் மாகாணசபைகளுக்கு வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே தேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்றார்.