13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தில் தமிழ் பேசும் தரப்பு இணக்க நிலை ஏற்பட்டுள்ளது

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டல் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்ததுடன், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க தீர்மானத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அழைக்கப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை சிறப்பம்சம்.

புளாட் சார்பில் சித்தார்த்தன் தமக்குப் பதிலாக ஆர்.ராகவனை அனுப்பியிருந்தார். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமது சார்பில் அமீர் அலியை அனுப்பியிருந்தார்,சி.வி விக்னேஸ்வரன்,பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

கூட்டத்துக்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார்.

தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் நேற்று மாலை முழுவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.

மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, குருசாமி சுரேந்திரன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மாவை,ஜனா,சுமந்திரன், ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணி அளவில் நகல் வடிவதற்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது. தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் ஆவண வடிவம் தயாரிக்கப்பட்டது.

ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அவையும் அவற்றை ஆராய்ந்து சம்மதித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப் படுவதோடு, இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை இறுதிப்படுத்தி அதில் சகல தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக இந்த செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செம்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.