1988ன் பின் தொடர்ச்சியாகப் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சி ரெலோ மாத்திரம் தான்- செயலாளர் நாயகம் – கோ.கருணாகரம் ஜனா பா.உ

1988ல் அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2009ற்கு முன்பு இருந்த கூட்டமைப்பு வேறு, 2009ற்கு பிற்பாடு இருக்கும் கூட்டமைப்பு வேறு. 2009ற்குப் பின்னர் தனிக் கட்சி, தனிமனித கௌரவம் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டமைப்பு பிளவுபட்டிருக்கின்றது. 2010 தேர்தலுடன் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 2015 பாராளுமன்றத் தேர்தலுடன் ஈ.பி.ஆர்.எல்.எப் வெளியேறியது. வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்களே அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்ததால் அவர் கூட்டமைப்பில் இருந்து வெளியேறினார்.

இன்று மூன்று கட்சிகள் தான் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன. அதிலும் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றது. தமிழரசுக் கட்சி கூட 2001 கூட்டமைப்பு தொடங்கப்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே அதில் அங்கம் வகித்தது. 2004லே ஆனந்த சங்கரி அவர்கள் கூட்டமைப்பின் அப்போதைய சின்னமான உதயசூரியனை கொண்டு சென்றமையால் சுமார் 34 வருடங்களுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னம் தூசு தட்டி எடுக்கப்பட்டதுதான் வரலாறு.

எனவே தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பு தொடங்கியதில் இருந்து இன்று வரைக்கும் இருப்பது மாத்திரமல்லாமல் 1988ம் ஆண்டு அரசியற் கட்சியாகப் பதியப்பட்டதில் இருந்து சந்தித்த ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தை வைத்திருக்கும் ஒரே ஒரு தமிழ்க் கட்சியென்றால் அது தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான். 2015ம் ஆண்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த நாங்கள் தற்போது மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம்.

அண்மையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கட்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. அதில் சக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தாங்கள் ஒரு பெரியகட்சி என்று மக்கள் மத்தியில் தங்கள் பெயரைக் கொண்டு செல்வதற்காக இந்த வேலைத்திட்டத்தைச் செய்வதாகக் கூறியிருந்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பெரிய கட்சிதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கு 3 பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். தமிழரசுக் கட்சிக்கு வெறுமனே ஐந்து உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள். ஆறாவது உறுப்பினரான தேசியப் பட்டியல் உறுப்பினரை எம்முடன் கலந்தாலோசிக்காமல் அவர்களே பெற்றுக் கொண்டார்கள். அந்த தேசியப் பட்டியல் எமக்குக் கிடைத்திருந்தால் நாங்கள் 4 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம்.

கூட்டமைப்பைச் சிதைப்பதற்கு அல்லது அதிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு கூட்டமைப்பினை மேலும் பலவீனமாக்குவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். பல உதாசீனங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றதன் நிமித்தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2009ற்குப் பின்னர் இந்தளவிற்கு பின்னடவைச் சந்தித்திருக்கின்றது.

ஏனெனில் 2004லே 24 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நாங்கள் அதன் பின்னர் படிப்படியாக 18, 16 என்றாகி இன்று தேசியப் பட்டியலுடன் சேர்த்து 10ற்கு வந்து நிற்கின்றோம். இந்த நிலைமை தொடருமாக இருந்தால் எதிர்காலத்தில் எவ்வாறு எங்களது மக்கள் பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதை உணர்ந்து இந்தக் கட்சிகள் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.