2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிலாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய இந்தத் தொழிலாளர் தின காலகட்டத்திலே இன்று தொழிலாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்கள் உட்பட மக்களும் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்காக வீதியிலே திண்டாடுகின்றார்கள். அவ்வாறு திண்டாடும் மக்கள் சாப்பாடு மாத்திரமல்ல, அவர்களுக்கான மருந்துப் பொருட்கள், எரிபொருள்கள், எரிவாயு, அதற்கும் மேலாக மீனவர்கள் இன்று தங்களது தொழிலை இந்த எரிபொருள் பிரச்சினையால் செய்ய முடியாமலும் இருக்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் உரப்பிரச்சினையால் இன்று நடுவீதிக்கு வந்திருக்கிறார்கள். இன்று மேதினக் கொண்டாட்டம் நடக்கவேண்டிய இந்த நாட்டிலே வீதிப் போராட்டங்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காலிமுகத்திடலில் பெருமளவான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இதே காலிமுகத்திடலில் 1956ஆம் ஆண்டு எங்களது மூத்த தமிழ் தலைவர்கள் மொழியுரிமைக்காக சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கெதிராக போராடியபோது தலைகளை உடைத்தார்கள், ஏன் இலங்கை இராணுவப்படைகள் பார்த்திருக்கும் போது காடையர்களை ஏவிவிட்டு அச்சுறுத்தினார்கள். அவர்கள் பாராளுமன்றம் சென்றபோது எள்ளி நகையாடினார்கள். ஆனால், இன்று என்ன நடக்கிறது. இதே காலிமுகத்திடலில் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜபக்க தரப்பினர் இந்த நாட்டினை எத்தனை தடவைகள் ஆண்டிருக்கிறார்கள். இந்த ராஜபக்ச சகோதரர்களை தமிழ் மக்களாகிய நாங்கள் கடந்த காலங்களில் வேண்டாமென்று கூறியிக்கிகன்றோம். 2010ம் ஆண்டு இந்தப் போரை ராஜபக்ச சகோதரர்களின் கட்டளையை ஏற்று நடத்திய சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கும் அளவிற்கு தமிழ் மக்கள் ராஜபக்ச சகோதரர்களை வெறுத்திருந்தார்கள்;. இந்த கோட்டபாய ராஜபக்ச அவர்களை தமிழ் மக்கள் 2019லேயே வேண்டாம், வீட்டுக்குப் போ என்று கூறியிருந்தார்கள்.
இந்த நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள காரணத்தினால் தான் இன்று சிங்கள இளைஞர்கள் போராட்த்திற்கு வந்திருக்கின்றார்கள். நாங்கள் எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக போராடிக் கொண்டு வருகின்றோம். 1957ல் தந்தை செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இன்றைய எதிர்க்கட்சித் தலைவரின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் புத்த மதகுருமார்களுடன் இணைந்து கொழும்பில் இருந்து கண்டிக்கு யாத்திரை தொடங்கினார். அதற்குப் பயந்து பண்டாரநாயக்கா அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அதன் விளைவு இத்தனை உயிர்களை இழந்தது மட்டுமல்லாமல் இன்றைய இத்தகைய பொருளாதார பின்னடைவிற்கும் அதுவே முதற் காணமாக இருக்கின்றது. இன்று இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதாரப் பிரச்சனையை முகங்கொடுத்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் ஒருவர் தலையில் பத்து இலட்சம் கடன் சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமைக்கான காரணம் பற்றி சிந்திக்க வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்;பட்டிருந்தால் இந்த நாட்டில் போர் மூண்டிருக்காது. போருக்காக பில்லியன் டொலர் கணக்கில் நிதியினை இரைத்திருக்கத் தேவையில்லை.
2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ராஜபக்ச சகோதரர்கள் இந்த நாட்டைக் கூறுபோட்டு விற்றுவிடுவார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழ் மக்கள் அவர்களை வெறுத்தார்கள். ஆனால் அவர்களை மகாராஜாக்களாகப் போற்றியவர்கள் இன்று மிக இழிவாகத் தூற்றுகின்றார்கள். இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார்.
இன்று பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்ற எதிர்த்தரப்பினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது, கோட்டபாயவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப் படுகின்றது. நிச்சயமாக கோட்டபாயவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் அவர் ஒரு பொருளாதாரக் குற்றவாளி மாத்திரமல்ல. தமிழ்த் தேசிய மக்கள் மனதில் அவர் ஒரு போர்க்குற்றவாளியாகவே இருக்கின்றார்.
ஆனால் பாராளுமன்றத்திலே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் எதிர்த்தரப்பினர் இந்த அரசு மாறினால் வரப்போகும் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால புரையோடியுள்ள பிரச்சனைக்கு என்ன தீர்வைத் தரப் போகின்றீர்கள். பொருளாதார ரீதியாக சிங்கள மக்கள் வீதியில் நிற்கிறார்கள். வயிற்றுப் பசிக்காக, மின்சாரத்துக்காக, எரிபொருளுக்காக, எரிவாயுவுக்காக, மருந்துப் பொருட்களுக்காக நிற்கின்றார்கள். ஆனால், தமிழர்கள் இவை அனைத்தையும் அனுபவித்தவர்கள், பழக்கப்பட்டவர்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இந்த நாட்டிலே நாங்களும் சம உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியுடன் கூடிய இணைந்த வடகிழக்கில் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றுதான் கேட்கிறோம்.
இன்று இந்த அரசாங்கத்தை இந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகத்தில் எந்த நாட்டுத் தலைவர்களும் நம்பமாட்டார்கள். ஏனெனில் கடந்த காலங்களிலே பல உலகத் தலைவர்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் இவர்கள். 2009ல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது சர்வதேசத்துக்கு தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வைக் கொடுப்போம் என்று உத்தரவாதமளிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்துக்கு மேலாக 13பிளஸ், பிளஸ், பிளஸ் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் எதுவுமே இடம்பெறவில்லை. ஆகையால், இன்று யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். இன்று எந்த நாட்டுத் தலைவரும் இந்த நாட்டுக்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள். காரணம் வந்தால் கடன் கேட்டுவிடுவீர்களோ என்பதால். ஏனென்றால் அண்மையில் மாநாடொன்றுக்கு வந்த பங்களாதேஸ் நாட்டு வெளிநாட்டு அமைச்சரிடம் ஏற்கனவே பட்ட 200 மில்லியனுக்கு மேலாக அதற்கொரு தவணையும் இன்னுமொரு 250 மில்லியன் கடனும் கேட்கின்றீர்கள். அதனால் தான் வெளிநாட்டுத் தலைவர்கள் கூட இந்த நாட்டுக்கு வருவதற்குப் பயப்படுகின்றார்கள்.
இன்று இந்த நாட்டுக்குக் கைகொடுப்பது யார்? இந்திய அரசுதான் கைகொடுக்கின்றது. பில்லியன் கணக்கான டொலர்களைக் கொடுக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திற்கு உங்களைச் சிபார்சு செய்கிறது. ராஜபக்ச சகோதரர்களே இது உங்களுக்காக அல்ல. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய தொப்புள் கொடி உறவுகள், அண்டை நாடு, சிறிய நாடு பட்டிணியால் சாகக் கூடாது என்ற ஒரே எண்ணத்துக்காகவே இவையெல்லாம். அதுமட்டுமல்லாது இந்திய மத்திய அரசையும் மீறி கடந்த வாரம் தமிழ் நாட்டு மாநில அரசிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். சந்தேசமாக இருந்தது. 1982 காலப்பகுதிகளில் எங்களை இந்தியா பயிற்சிக்காக எப்படி அன்போடு அரவணைத்ததோ, எப்படி எங்களுக்கு ஆதரவு தந்ததோ, எப்படி எங்களுக்கு கைகொடுத்ததோ அந்த ஆதரவை தமிழ் மாநில சபையிலே ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு, அரிசி 40ஆயிரம் மெற்றிக்தொன் என்றால் 25 கிலோ உடைய ஒரு கோடி 60 லட்சம் மூடைகள் அரிசி. 500 தொன் பால்மா, அதற்கு மேலாக மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றன கொடுப்பதற்குத் தமிழ் நாட்டு அரசு உதவி செய்கின்றது. தமிழ் நாட்டு அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்குத்தான் உதவி செய்வதற்கு ஆயத்தமானார்கள். ஆனால், நாங்கள் எங்களுக்கு மாத்திரம் வயிறில்லை. எங்களுக்கு மாத்திரம் மருந்துத் தேவையில்லை என்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் கொடுக்குமாறு கேட்டோம். அதனை இன்று பெருமையுடன் பேசிக் கொள்கிறார்கள். தமிழர்கள் நாங்கள் அப்படியானவர்கள்.
இன்று யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கெதிராகப் போராடிய இராணுவ வீரர்கள் கூட தமிழீழம் கிடைத்திருந்தால் அவர்களிடம் நாங்கள் கடன் வாங்கியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இதற்கும் மேலாக நாங்கள் உங்களிடம் எதைக் கேட்கின்றோம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சுந்திரமாக எங்களது பிரதேசத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்குத்தான் எங்களது உரிமையைக் கேட்கின்றோம். இன்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எந்த அரசும் தருவதற்குத் தயாராக இல்லை.
இன்று பௌத்த மத பீடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றுமாறு கூறுகின்றீர்கள். ஆட்சி மாற்றம் வேண்டும்தான். ராஜபக்ச சகோதரர்கள் எமக்கும் வேண்டாம். ஆனால், இதே பௌத்த பிக்குகள் இவர்களது சமாசம் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒருதீரவைக் கொடுக்குமாறு கூறுவார்களா? கூறமாட்டார்கள். ஏதாவது ஒரு அரசு இந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுக்க வேண்டுமெனக் கூறினால் கூட இந்த மகா சங்கத்தினர் கூடி அரசுக்கெதிராகத் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கும் மேலாக இன்று கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை செல்லும் சஜித் பிரேமதாச கூட அவரது முன்னைய தலைவர்கள் போல சிலவேளைகளில் கொழும்பிலிருந்து கூட கண்டிக்கு பாத யாத்திரை செல்லக்கூடிய நிலை வரலாம். எனவே இன்றைய சூழ்நிலையில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நிதானமாகச் சிந்திக்கிவேண்டிய நேரம்.
பல இடங்களில் போராட்டம் நடைபெறுகின்றன. பாராளுமன்றத்தில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறன. நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப்பிரேரணைகள் வர இருக்கின்றன. இந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல, தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியத்தை விரும்பும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தம்பி சாணக்கியன் கூறினார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி அலுவலகத்தில் சென்று கையொப்பமிட்டார்களாம். இன்னுமொரு உண்மையையும் நான் கூறவேண்டும். அவர்கள் கையொப்பமிடும்போது அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே எழுத்துவடிவம் பெறவில்லை. என்ன இருக்கிறதென்றே தெரியாமல் வெறும் பேப்பரிலேயே கையொப்பமிட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலை எங்களுக்கிருக்கக் கூடாது. நாங்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்.
2009க் முன்பு இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இருக்க வேண்டும். எமது உரிமைகள் கிடைக்கும் வரை எமது மக்கள் சுதந்திரமாக வாழும் வரை நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.
மட்டக்களப்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் தவறிழைத்திருக்கிறார்கள். 69ஆயிரம் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாத்திரமல்ல இந்த ராஜபக்ச சகோதர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். இவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று என்ன நடக்கிறது. அவர்களுக்கு அளித்த வாக்குகள் இந்த நாட்டு மக்களை எப்படி வதைக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்து, எதிர்காலத்தில் பிழை விட்டவர்கள் திருந்தி தமிழ்த் தேசியத்தின்பால் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென்று இந்த மேதினத்தில் சபதமேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.