லங்கா சதொச நிறுவனத்துக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் 1500 கோடி ரூபா நட்டமும், 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 60 கோடி ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளதாக பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப் குழு) கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அரிசி இறக்குமதியின்போது மாத்திரம் லங்கா சதொச நிறுவனத்துக்கு 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அரிசி மூடைகள் மனித பாவனைக்கு ஏற்புடையதாக இருக்காதவாறு காலாவதியாகியுள்ளது. இவ்வாறு காலாவதியாதியான, அரிசி கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவது தொடர்பில் கோப் குழுக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.
லங்கா சதொச நிறுவனத்துக்கு பொருத்தமான வர்த்தக மாதிரி ஒன்றை தயாரித்து அதனை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக, பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா, ஜயந்த சமரவீர, எஸ்.எம்.மரிக்கார், எஸ். எம். எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, சாணக்கியன் ராசமாணிக்கம், மதுர விதானகே, பேராசிரியர் சரித்த ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.