“2022 இல் இலங்கைக்கு பாரிய அழிவு” எதிரணி அபாய மணி!!

இலங்கையை சிறப்பாக நிர்வகிப்போம் எனத் தெரிவித்த கோட்டாபய – மஹிந்த தரப்பினர், அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர் என ஐக்கிய மக்கள் சக்தி கடுமையாக விமர்சித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, புத்தாண்டில் பாரிய அழிவு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த 2022 ஆம் ஆண்டில் பாரிய அழிவொன்று ஏற்படப்போகிறது. விவசாய பிரச்சினைக்கு ஒமைக்ரோன், டெல்டா என்பவை காரணம் அல்ல. கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து அத்தியாவசிய சேவைகளாக அரிசி ஆலைகள் செயற்பட்டன. விவசாயிகளும் அவர்களுடைய வேலைகளை பார்த்தார்கள், அவர்கள் வீட்டில் இருக்கவில்லை.

நாம் தான் சிறப்பாக செய்தோம், எனக்குத் தான் அனைத்தும் தெரியும் எனக் கூறி அனைத்தையும் நாசம் செய்துவிட்டனர்.

இந்த உணவு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு 100 வீதம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தான் காரணம்.

அரச தலைவர் அவர்களே, மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் உள்ளார்கள். ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒரு வேளை உணவை மாத்திரமே உட்கொள்கின்றனர். மக்களின் நிலைமையை நேரில் சென்று பாருங்கள்” என கோரிக்கை விடுத்துள்ளார்.