உத்தேச அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.திருத்தச்சட்ட மூலவரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதி,சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.
திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவையின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததை தொடர்ந்து திருத்த வரைபிற்கு அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டது.
சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திருத்தச்சட்டமூலத்தை சமர்ப்பித்தமைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீதியமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அரசியமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமான திருத்தச்சட்ட வரைபு தொடர்பில் சகல கட்சிகளுடன் விளக்கப்படுத்தல் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.
திருத்தச்சட்டமூல வரைபினை நிறைவேற்றுவதன் அவசியத்தை உணர்ந்து அமைச்சரவை பச்சை கொடி காட்டியுள்ளமை வரவேற்கத்தக்கது.21ஆவது திருத்தத்திற்கு அங்கிகாரம் வழங்கியமைக்கு நீதியமைச்சர் அமைச்சரவைக்கு நன்றியினை தெரிவித்துள்ளார்.
21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் வர்த்தமானியில் வெளியிட்டு ,வரைபினை பாராளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் அமைச்சரவைக்கு அறிவித்தார்,வரைபினை வெகுவிரைவில் பாராளுமன்றில் சமர்ப்பித்து,விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சரவையில் வலியுறுத்தப்பட்டது.
நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ அரசியலமைப்பின் 21ஆவது சட்டமூல வரைபினை கடந்த மே மாதம் 23ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.குறித்த வரைபினை நிறைவேற்ற முன்னர் சகல கட்சிகளின் யோசனைகளை பெற்று திருத்தப்பட்ட வரைபினை கடந்த 6ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கடந்த ஒருமாத காலமாக சகல அரசியல் கட்சிகளினதும்,சிவில் அமைப்புக்களினதும் யோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபு தொடர்பில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற கட்சிதலைவர் கூட்டத்தில் 4 பிரதான விடயங்களுக்கு சகல கட்சி தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
இரட்டை குடியுரிமையுடைய நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்ற யோசனையை திருத்தங்களின்றி செயற்படுத்தவும்இஜனாதிபதி பாராளுமன்றத்தின் அனுமதியுடன் பிரதமரை பதவி நீக்க வேண்டும் என்ற திருத்த யோசனையையும்,
அத்துடன் அமைச்சரவையின் விடயதானங்கள் வேறாக்கத்தின் போது ஜனாதிபதி பரிந்துரைக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் (தற்போதைய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனைக்கமைய செயற்பட வேண்டும், 10ஆவது பாராளுமன்றில் அமைச்சரவை விவகாரத்தில் ஜனாதிபதி பிரதமரின் பரிந்துரைக்கமைய செயற்பட வேண்டும்),
தற்போதைய 9ஆவது பாராளுமன்றம் செயற்பாட்டில் உள்ள நிலையில் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க முடியும், அடுத்த பாராளுமன்றம் அமுலில் உள்ள போது ஜனாதிபதி எந்த அமைச்சினையும் வகிக்க கூடாது என்ற யோசனைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட யோசனைகளுக்கமைய 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.குறித்த வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு,பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பிரஜைகள் எவரும் குறித்த சட்டமூல வரைபினை சவாலுக்குட்படுத்தி,7 நாட்களுக்குள் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய முடியும்.