அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டத்தை வெகுவிரைவில் நிறைவேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
21ஆவது திருத்தத்தை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்கவும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
சகல கட்சிகளின் யோசனைகளையும் பெற்று அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை எதிர்வரும் மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிரதமர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்த்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்,இரட்டை குடியுரிமையுடைய நபர் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல்,சுயாதீன ஆணைக்குழுக்கள் மீள் ஸ்தாபிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஏதேனும் சூட்சமம் உள்ளதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது.குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை ஏமாற்ற நினைத்தால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்குதல் அல்லது இரத்து செய்யல் விவகாரத்தில் பொதுஜன அபிப்ராயத்தை கோருவது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகார விவகாரத்தை இருகட்டமாக செயற்படுத்த வேண்டும்.பொதுசன அபிப்ராயத்தை கோருவதும் சாதகமாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பிலான விவகாரம் தற்போது உயர்நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அவ்விடயம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும், அடுத்தக்கட்ட நகர்வுனையும் தற்போது முன்னெடுக்க முடியாது என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.
மக்களின் எதிர்பார்ப்பிற்கமைய அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அமைச்சு பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகுவார்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரம் மட்டுப்படுத்தல், இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதற்கு தடை விதித்தல் உள்ளிட்ட பிரதான யோசனைகளுக்கு சுதந்திர கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இதன்போது குறிப்பிட்டார்.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றத்தில் சகல தரப்பினரது யோசனைகளையும் பெற்றுக்கொள்வதும் அவசியமாகும்.புதிய அரசியலமைப்பு உருவாக்க பாராளுமன்ற தெரிவு குழுவை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது.
இரட்டை குடியுரிமை கொண்டவர் அரசியலில் மாத்திரமல்ல அரச உயர் பதவிகள் வகிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
சகல கட்சிகளினதும் யோசனைகளை பெற்று எதிர்வரும் 6ஆம் திகதி அமைச்சரவையில் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்து விரைவாக நிறைவேற்றிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பங்குப்பற்றலுடன் எதிர்வரும் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிறிதொரு கூட்டத்தை நடத்தி அரசியலமைப்பு வரைபு யோசனை பெறலை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியினர் தமது யோசனைகளை நீதியமைச்சரிடம் கையளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.