இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 22வது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உயரிய சபையில் இன்று நமது நாட்டின் அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டத்தை விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். இச் சந்தர்ப்பத்தில், எனது உரையினை சில வரலாற்றுக் கண்ணோட்டங்களோடு நோக்கிப் பார்க்கலாம் என எண்ணுகிறேன்.
அரசியலமைப்புச் சட்டம் ஒரு நாட்டின் அதியுயர் சட்டமாகும். ‘The constitution is the Supreme Law of the country’என்பார்கள். அதிலிருந்துதான் நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தையும் வழிகாட்டலையும் ஆட்சியாளர்கள் பெறுகின்றார்கள்.
எமது நாடு வரலாற்றுக் காலம் முதல் 1833ல் கோல்புறுக் – கமரன், 1929ல் மனிங், 1924ல் மனிங் டெவன்சியர், 1931ல் டொனமுர், 1947ல் சோல்பரி என குடியரசாகும் வரை பல அரசியலமைப்புக்களைக் கண்டுள்ளது. 1972ல் டொமினியன் அந்தஸ்திலிருந்து குடியரசாக மாறியது. 1978ல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இன்று இது 22வது திருத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த அரசியலமைப்பின் வயது 44 வருடங்களாகும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட முடியாததோ, திருத்தம் செய்யப்படக் கூடாததோ அல்ல. அத்திருத்தங்கள் நாட்டு நலனை மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு இதுவரை 27 திருத்தங்களைக் கண்டுள்ளது. 73 வருடங்களைக் கொண்ட இந்திய அரசியலமைப்பு இதுவரை 105 திருத்தங்களைக் கண்டுள்ளது.
இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது அரசியலமைப்பு ஒன்றும் கல்லில் பொழிந்த கல்வெட்டல்ல. தேவைக்கேற்ப திருத்தப்பட வேண்டியதே. இந்திய அரசிலமைப்பின் திருத்தங்கள் இந்திய பன்மைத்துவத்தின் ஊடாக இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க உதவியது. மொழிவாரி ரீதியாக இந்திய மாநிலங்கள் உருவாக்கப்பட்டு, இந்திய சமஸ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதே இன்றளவும் இந்தியா அகண்ட பாரதமாக பிரிவினையற்ற ஒரே தேசமாக உலகில் தலை நிமிர்ந்து நிற்பதற்கான காரணமாகும். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பும் பல்வேறு தேசிய இனங்களினதும் சுய நிர்ணய உரிமையைக் கருத்தில் கொண்டு சமஸ்டி அரசியலமைப்பின் ஊடாக தனி ஒரு வல்லரசாக உலகில் உயர்ந்து நிற்கின்றது.
இத்தகைய அரசியலமைப்பு திருத்தங்களின் பின்னணியில் எமது நாட்டில் இதுவரை கொண்டு வரப்பட்ட 20 திருத்தங்களிலும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, நாட்டின் தேசியப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக, நாட்டின் பல்லின, இருமொழி சமத்துவத்தைப் பேணுவதற்காக, இனங்களிடையே, மதங்களிடையே, மொழிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு அரசியல் திட்டத் சீர்திருத்தத்தையாவது உங்கள் மனச்சாட்சியின் படி தொட்டுக் காட்ட முடியுமா?
திருத்தப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் வரலாறுகளைக் கூறினால் அது நீண்டுவிடும். அதற்காக ஒரு சில உதாரணங்களைக் கூறுகின்றேன்,
எமது அரசியலமைப்பின் 2வது திருத்தம் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை அவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தாவியதன் மூலம் அப்போதைய அரசியலமைப்புச் சட்டப்படி அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெறிதாகிவிடும் என்பதற்காக அவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம்.
3வது திருத்தம் 6 வருடங்களுக்கு ஒரு முறை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதியினை முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலத்தின் 4 ஆண்டினை முடித்த பின்னர் அடுத்த ஜனாதிபதித் தவணைக்குத் தேர்தலை நடத்தலாம் என்பது.
4வது திருத்தம் 1977ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து 6 ஆண்டுகளில் அதாவது 1983ஆம் ஆண்டு கலைக்கப்பட வேண்டிய பாராளுமன்றத்தை 1989ஆம் ஆண்டுவரை நீடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம்.
6வது திருத்தம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து அவர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இல்லாமல் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தம்.
13வது திருத்தம் ஆட்சியாளர்களது விருப்பத்துக்கு மாறாக பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களது விருப்பத்துக்கு மாறாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினால், பிரசவிக்கப்பட்ட குழந்தை.
18வது திருத்தம் மஹிந்தவினுடைய ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களினை மேலும் வலுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தம்.
19வது திருத்தம் நல்லாட்சி அரசாங்கம் என்று கூறப்பட்ட அரசினால், ஜனநாயகத்;தை மீளக் கொண்டுவருவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம் எனக் கூறப்பட்டாலும் அதன் அடிப்படை நோக்கம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை இலங்கை அரசியலிலிருந்து ஒழித்துக் கட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திருத்தமே ஆகும்.
20வது திருத்தம் கோட்டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு தீணி போடுவதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம்.
இங்கு உதாரணத்துக்காக எடுத்துக் காட்டப்பட்ட இந்தத் திருத்தங்களில் எந்தத் திருத்தம் நாட்டு நன்மைக்கானது எந்தத் திருத்தம் நாட்டு மக்களின் நன்மைக்கானது. எந்தத் திருத்தம் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நாட்டில் புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வானது. இந்திய இலங்கை ஒப்பந்தப்படி அதன் நிர்ப்பந்தத்தினால் உருவான 13வது திருத்தச் சட்டத்தினை இனப்பிரச்சினை தீர்வின் தொடக்கப் புள்ளியாக வைத்து முன்நோக்கிச் செல்லலாம் என்ற எமது எண்ணத்திலும் கூட அந்தச் சட்டத்தின் உள்ளடக்கத்தினை சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி வலது குறைந்த நிலைக்குத் தள்ளி எமது எண்ணத்தில் மண்ணைத் தூவினீர்கள்.
உங்களுடைய தேவைக்காக பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கான அரசியலமைப்பின் 7வது திருத்தத்தின் மூலம் இலங்கையின் 24 நிருவாக மாவட்டங்களை 25 நிருவாக மாவட்டங்களாக மாற்றினீர்கள். உங்களுடைய தேவைக்காக மாகாணங்களின் எல்லைகளைப் பிரித்து அருகிலுள்ள மாகாணங்களோடு இணைத்து தமிழர்களின் குடிப்பரம்பலைக் குறைத்து அந்தந்த மாகாணங்களில் தமிழர்களை சிறுபான்மையினராக்குவதற்காக காரியங்களைச் செய்தீர்கள். உங்களுக்குத் தேவையெனில் பிரதேச சபைகளை, பிரதேச செயலகப் பிரிவுகளை உருவாக்குவீர்கள். ஆனால், என்றோ உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் எம் தமிழர்களுக்கான கல்முனை வடக்கு பிரதேச செலயகத்தினை தரமுயர்த்துவதற்கு உங்களுக்கு இனவாதமொன்றைத் தவிர எந்த அரசியலமைப்பின் உறுப்புரை தடை செய்கிறது.
1881ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பரம்பலை உற்றுநோக்கும் எவரும் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே சிறுபான்மையாக்கப்பட்ட உண்மைத் தன்மையினை மறுதலிக்க முடியாது.
வரலாறு முற்றும் கற்றுத் தெரிந்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர திருகோணமலைப் பெயருக்கு புதிய அர்த்தம் கற்பிக்கின்றார். திருகோணமலையில் அல்லை கந்தளாய் சீனித் தொழிற்சாலை குடியேற்றங்கள் ஏற்படும் வரையும் 3 வீதத்துக்கும் குறைவான சிங்களவர்களே வாழ்ந்தார்கள் என்பதை அவர் அறிவாரா? மூன்று இனங்கள் வாழ்ந்ததனால் அல்ல மூன்று மலைகள் சூழ உள்ளதனால் திருகோணமலை என்ற பெயர் வந்ததென்பதை அவர் அறிவாரா?
இன்று ஒரு தொகுதியாக உருவாக்கப்பட்ட சேருவில அன்று தோப்பூர் கிராம சேவையாளர் பிரிவின் ஒரு பகுதியாகவே இருந்த உண்மையை சரத் வீரசேகர அறிவாரா? பேரினவாதத்தின் தேவைக்காக அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஒரு மாவட்டத்தைக் கூட்டுவீர்கள். ஒரு தேர்தல் தொகுதியை உருவாக்குவீர்கள். ஒரு மாகாணத்தின் ஒரு பிரிவினை இன்னொரு மாகாணத்தோடு இணைப்பீர்கள். ஆனால், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக வடக்கு கிழக்கினை இணைத்து எமது பிரச்சினையினைத் தீர்ப்பது பயங்கரவாதமும் பிரிவினைவாதமுமென்பீர்கள். அரசியலமைப்புக்கு முரண் என்பீர்கள்.
நீங்கள் மேற்கொண்ட அத்தனை அரசியலமைப்பு திருத்தங்களும் அந்தந்த நேரத்தில் ஆட்சி செய்த கட்சியினுடைய நலனுக்காக ஆட்சித் தலைவருடைய நலனுக்காக அவர்களுடைய குடும்பத்தினுடைய நலனுக்காக அவர்களுடைய ஆதரவாளர்களுடைய நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதேயொழிய நாட்டுக்காக மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டவையல்ல.
இந்த நிலைமையில் நாம் 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் காணப்போவது என்ன இன நல்லிணக்கமா, மத நல்லிணக்கமா, தேசிய ஒருமைப்பாடா அல்லது பொருளாதார மேம்பாடா, இதில் எதைக் குறிவைத்து இந்த 22ஆவது திருத்தத்தை நாம் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
உலகில் ஜனநாயகத்தை மதிக்கும் ஜனநாயகத்தைப் பேணும் ஜனநாயகத்தைப் போற்றும் எந்த நாட்டிலும் எந்த ஒரு தலைவரும் மேற்கொள்ளாத அரசியலமைப்புத் திருத்தத்தங்களைச் செய்து சாதனை படைத்தவர்கள் நீங்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியும் பாராளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரும் ஒருமித்துச் செயற்பட முடியாத வரலாற்றுச் சாதனைக்குரியவர்கள் நீங்கள். தேர்தல் முடிந்ததும் வாக்களித்த மக்களுக்கு நன்றியுரையாற்றுகையில் எந்த ஒரு ஜனநாயக நாட்டின் தலைவரும் உரையாற்றாத வகையில் தனக்கு வாக்களிக்காதவர்களின் முகத்தில் காறி உமிழ்வது போல் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் என்று போதி மரத்தின் கீழ் நின்று உரையாற்றி மக்களது வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மதிக்காது மமதை கொண்டு சாதனை படைத்தவர்கள் நீங்கள்.
பதவியேற்கும் போது இலங்கை அரசியலமைப்பைப் பேணிப்பாதுகாப்பேன் அதனை மீறாது அதன் வழி நடப்பேன் என சத்தியம் செய்து உறுதி மொழியெடுத்த நீங்கள் இலங்கை அரசியலமைப்பின் எத்தனை சரத்துக்களை மீறியுள்ளீர்கள். குறிப்பாக அரசியலமைப்பின் அங்கமான 13வது திருத்தத்தை அப்பட்டமாக மீறி, குறுக்கு வழியில் அதனைச் சின்னாபின்னப்படுத்தி இந்த அரசியலமைப்பினையே மீறிச் சாதனை படைத்தவர்கள் நீங்கள்.
இந்தச் சபையின் ஊடாக நாட்டின் பெரும்பான்மைச் சிங்கள பொளத்த மக்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.
ஆட்சியினைக் கைப்பற்றுவதற்காக, பதவியினைக் கைப்பற்றுவதற்காக, அதிகாரத்தினைக் கைப்பற்றுவதற்காக எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியாவது மதம் மாறியதுண்டா? எந்த ஒரு அரசியல்வாதியாவது, தான் வழமையாக அணிந்துவந்த ஆடையினை மாற்றியதுண்டா, தனது பெயரினை மாற்றியதுண்டா, உறவுகளை மாற்றியதுண்டா, கலப்புமணம் புரிந்ததுண்டா, பெயரை மாற்றியதுண்டா, தன் வழமையான கையெழுத்தைத் தான் மாற்றியதுண்டா.
டி.எஸ்.சேநாயக்கா தொடக்கம் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஈறாக இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரை இதில் அடக்கமானவர்களே.
ஆனால், நாடு கையறு நிலையில் இருந்த போது இந்த நாட்டின் ஜனநாயகப் பெருமைகளைக் காப்பாற்றுவதற்காக, பாராளுமன்றத்தின் மாண்பினைக் காப்பாற்றுவதற்காக, ஜனநாயக விரோத சட்டங்களினைத் தோலுரித்துக் காட்டுவதற்காக நடவடிக்கையெடுத்தவர்கள், தமிழர்களும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுமே என்பதனை நான் இந்த உயரிய சபையில் உரத்துப் பதிவு செய்து கொள்ள விரும்புகிறே;ன.
மக்களின் அமோக ஆதரவு பெற்ற அரசுத் தலைவர் அதே மக்களினால் பதவியிலிருந்து துரத்தப்படுகிறார். தேசியப்பட்டியயல் ஊடாக பதவிக்கு வந்த ஒரேயாரு பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் அதியுயர் பதவிளை அலங்கரிக்கிறார். பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து ஜனநாயகத் தன்மைக்கு விரோதமாக சுயாதீன அணியென்று ஒரு குழு இயங்குகின்றது. அவ்வாறு இயங்குபவர்கள் இனவாத அரசியல்வாதிகளை தமக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் வைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்ற முயல்கின்றார்கள். இதில் ஒரு முக்கியமென்னவென்றால் இவர்களில் ஒருவரை நம்பி கடந்த பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதித் தெரிவில் நாமும் வாக்களிக்கவேண்டிய நிர்ப்பந்தம் கூட எமக்கு ஏற்பட்டது.
இறுதியாக நான் கூறுவது, 22வது திருத்தச் சட்டம் சம்மந்தமாக இரண்டு விடயங்களைக் கூற விரும்புகின்றேன். இதற்கு நாங்கள் வாக்களிப்பதா இல்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும். தற்போது எட்டு அரசியற் கைதிகளை இந்த அரசாங்கம் விடுதலை செய்கின்றது. அதனை விட இரட்டைப் பிரஜாவுரிமையை மீண்டும் கொண்டு வருவதை வெறுகின்றேன். நானும் இரட்டைப பிரஜாவுரிமை வைத்திருந்தவனே.
இந்த நாட்டுக்கு மும்மணிகளின் ஆசீர்வாதங்களோடு எம் திருக்கோணமலை திருக்கோணேஸ்வரத்தானின் ஆசீர்வாதமும் ஒளியும் அருளும் கிடைக்க வேண்டுமென்று நான் பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்தார்.