22ஆவது திருத்தம்: ஆராயுமாறு ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வேண்டுகோள்!

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாடி மேலதிக ஆய்வில் ஈடுபடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலம் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரக் குழுவில் அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை இம்மாதம் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைக்கு அரசியலமைப்பு திருத்தம் தேவையில்லை என ஆளுங்கட்சி பராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தருணத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நாட்டுக்கு தேவை என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரங்களை விட்டுக்கொடுக்க இது பொருத்தமான சந்தர்ப்பம் அல்ல எனவும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம், அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு பொதுஜன பெரமுனவின் 30க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.