அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திருத்தச்சட்டமூல வரைபினை இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபு மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதியமைச்சர் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை சமர்ப்பித்தார்.
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் ஒருசில விடயங்கள் திருத்தங்களுக்குட்படுத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் முன்வைத்த யோசனைகளுக்கமைய நீதியமைச்சர் சட்டமூல வரைபில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.
நீதியமைச்சர் சமர்ப்பித்த சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.22ஆவது திருத்தச்சட்ட வரைபு திருத்தம் செய்யபட்டு வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து,இவ்வார காலத்திற்குள் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டார்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 22ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துடனான அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சி தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.