22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவை – யுனிசெப்

இலங்கையில் உள்ள சுமார் 56,000 குழந்தைகள், கடுமையான போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள 22 இலட்சம் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் 4.8 மில்லியன் குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகல் கிடைக்க வேண்டும் எனவும் யுனிசெப் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

6.2 மில்லியன் மக்கள் மிதமான உணவுப் பற்றாக்குறையாலும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 5 குடும்பங்களிலும் 2 குடும்பங்கள் தமது மாதாந்த சம்பளத்தில் 75 வீதத்தை தமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ய செலவிடுவதாகவும் அந்தக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மிகக் குறைந்தளவு நிதியையே செலவிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் காரணமாக பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சேமிப்பில் பெரும்பகுதியை செலவழித்துள்ளதாக சுட்டிக்காட்டும் அறிக்கை, அந்த குடும்பங்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிக்கலை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 286 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.