எதிர்வரும் 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும் வீடுகளிலேயே தங்கியிருக்கமாறு கொவிட் ஒழிப்பு தொடர்பிலான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும் என
செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பயணத் தடை தளர்த்தப்படுவது உணவுப்பொருட்கள் மற்றும் ஔடதங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக மாத்திரமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணியிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத் தடை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்பட்டு அதேநாள், இரவு 11 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
பயணத் தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
பயணத் தடை தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்தகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களை மாத்திரமே திறந்து வைப்பதற்கு
வாய்ப்பளிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.