30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு கவலை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்திருக்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் உள்ளடக்கங்களில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டிணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பு இணையவழியின் ஊடாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது இருதரப்பினரதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விருப்பத்தை இருதரப்பினது பிரதிநிதிகளும் பகிர்ந்துகொண்டதுடன் வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் சுகாதாரம், விவசாயம், சுற்றுலா ஆகிய துறைகளை மீண்டும் மேம்படுத்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட 22 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிக்கு நன்றியை வெளிப்படுத்திய இலங்கையின் பிரதிநிதிகள், தொற்றுநோய்ப்பரவலினால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த பல்தரப்பு முறைமையின் அவசியம் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கையின் பொருளாதாரத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்கியதாகக் கூறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 2.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருப்பதுடன், இதன் விளைவாக இலங்கையின் 2 ஆவது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக ஐரோப்பிய ஒன்றியம் மாறியிருப்பதாகவும் குறிப்பிட்டனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இலங்கையில் இறக்குமதித்தடைகள் விதிக்கப்பட்டமையின் விளைவாக ஐரோப்பிய வணிகங்களில் குறித்தளவான வீழ்ச்சியொன்று ஏற்பட்டமை தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்தனர்.