கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.
நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.
அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சித்திரை புத்தாண்டை தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஒன்றிணைந்துள்ளனர்.
கொழும்பு – காலி முகத்திடலிலுள்ள ஆர்ப்பாட்ட பகுதியில் இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடினர்.
இதனிடையே, முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக பிரசாத் இன்று காலை காலி முகத்திடலில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் .
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றன.
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெறுகின்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவை வழங்குவதற்காக இன்று காலை நீர்கொழும்பு ரயில் நிலையத்திற்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
வலஸ்முல்ல பகுதியிலும் இளைஞர் யுவதிகள் ஒன்றிணைந்து இன்று முற்பகல் முச்சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஹொரணை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது. சுமார் 2 மணித்தியாலங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வௌிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
ஊழல் ஆட்சிக்கு எதிரான சுதந்திர இலங்கையர்களின் குரல் என்ற தொனிப்பொருளில் நேற்று இத்தாலியில் போராட்டம் ஒன்று வலுப்பெற்றது. ரோமில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஊழல் மிகு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இத்தாலியில் வசிக்கின்ற இலங்கையர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இதேவேளை அமெரிக்காவின் அரிசோனா பிராந்தியத்தில் உள்ள அரச பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.