’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில் ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய முதலாவது கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதே வேளை அநுராதபுரம் மாவட்டத்தில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது.

ஜே.வி.பி.யின் பிரதான கூட்டம் கொழும்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலிருந்து பேரணியாக புறக்கோட்டை புகையிரத நிலையம் வரை சென்று அங்கு கூட்டம் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.