எட்டு அமைச்சுகளின் செயலாளர்களின் நியமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பான குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (23) நடைபெற்ற பாராளுமன்ற உயர் பதவிகள் தொடர்பிலான குழுவில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அனுமதி வழங்கப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் உள்ளடங்குகின்றார்.
அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சு, திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு, கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு தோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி, அவை சார்ந்த தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றிற்கான செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.
பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், தளபாடங்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு மற்றும் தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர், கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோரையும் நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.