வடக்கு கிழக்கில் தொடர் போராட்டம்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியும் ஆதரவு

வட கிழக்கு பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் , சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் எனது உயிர் இருக்கும் வரை நான் தொடர்ந்தும் மக்களுடன் பயணம் செய்வேன் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.