இந்தியா இலவசமாக வழங்குகின்ற கொரோனா தடுப்பூசியை எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அங்கிருந்து வருகின்ற முதலீட்டாளர்களை அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமானது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய முதலீட்டாளர்களை இலங்கையில் அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றவர்கள் ஏன் அங்கிருந்து வந்த கொரோனா தடுப்பூசியை திருப்பி அனுப்பவில்லை? ஏனென்னறால் அது உயிரை பாதுகாக்கின்ற காலத்தின் தேவையாக இருக்கின்றது. தேவைக்கு பயன்படுத்தி தூக்கி எறிகின்ற என்னத்திலேயே இன்று பல கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர்தான் தேசப்பற்றாளர்கள்.
இந்தியாவின் முதலீட்டாளர்களுக்கு துறைமுகத்தின் ஒரு பகுதியை நிர்வகிப்பதற்கு எதிராக கோசமிடுவது எமது பொருளாதாரத்திற்கு அடிக்கப்படும் சாவு மணியாகும். ஏனெனில் எதிர்காலத்தில் இன்னும் பல இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையில் தங்களுடைய முதலீடுகளை செய்வதற்கு தயாராக இருக்கின்ற இந்த நிலையில் அவர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவர்கள் எப்படி முதலீடுகளை இலங்கையில் செய்வார்கள்?
எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டும். தனியே நாங்கள் மாத்திரம் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. மேலும் இந்தியா என்பது எங்களுடைய அயல்நாடு. அவர்களுடன் எங்களுக்கு கடந்த பல தசாப்தங்களாக நெருங்கிய உறவு அனைத்து வழிகளிலும் இருக்கின்றது.
நாங்கள் எல்லாவற்றையும் சீனாவிற்கு மாத்திரம் வழங்குவதால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இந்தியா சீனா உட்பட ஏனைய நாடுகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயாராக வேண்டும்.
இன்று தேசப்பற்றாளர்கள் என கூறிக் கொள்கின்றவர்கள் எந்தவிதமான கொள்கையும் இல்லாதவர்கள் என்பதை நாங்கள் கடந்த கால அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
எந்த நாடுகளுக்கு எதிராக கோசம் போடுகின்றார்களோ அந்த நாடுகளில் சென்று யாருக்கும் தெரியாமல் உல்லாசம் அனுபவித்து விட்டு வருகின்றவர்கள்தான் இந்த தேசப்பற்றாளர்கள். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இவர்கள் கூறியதை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.
இன்று இந்த எதிர்ப்பு காரணமாக எங்களுடைய பொருளாதாரம் இன்னும் பின்னடைவை சந்திக்குமே தவிர முன்னேற்றம் ஏற்படாது. அதனை அரசாங்கமும் தற்பொழுது நன்கு உணர்ந்துள்ளது. எனவே வீணாக எதிர்ப்பை காட்டுவதை விட்டு விட்டு வருகின்ற முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுத்து எங்களுடைய நாட்டின் தனித் தன்மையை விட்டுக் கொடுக்காமல் செயற்படுவதற்கு அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.
இன்று எதிர்ப்பு கோசம் எழுப்புகின்ற பலரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டால் பாதிக்கப்படுகின்றவர்கள் அல்ல. அந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றவர்கள் பொது மக்களே. எனவே நாட்டு மக்களின் நன்மை கருதியே நாங்கள் செயற்பட வேண்டுமே தவிர. வெறுமனே எதிர்ப்பு கோசமிடுவதால் எதனையும் சாதிக்க முடியாது.