பொத்துவில் – பொலிகண்டி பேரெழுச்சிப் பேரணி கிளிநொச்சி நகரை அடைந்தது!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாளான இன்று வவுனியாவில் இருந்து காலையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கொறவப் பொத்தான வீதி ஊடாக மன்னார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தது.

அங்கு ஆயிரக்காணக்கானோரின் ஆதரவுடன் தொடர்ந்த பேரணி வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குச் சென்று அங்கிருந்து தற்போது கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.

இதன்போது குறித்த பேரணியை ஆதரிக்கும் வகையில் கிளிநொச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியின் இரு மருங்கிலும் திரண்டு நிற்பதாக கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.