இலங்கை தமிழர்கள் மீதான இந்தியாவின் கரிசனை உண்மையானது – இந்திய வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது இந்தியா கொண்டிருக்க கூடிய கரிசனையானது நீண்ட வரலாற்றைக் கொண்ட உண்மையான விடயமாகும்.

இதனை தேர்தல் கால விவகாரமாக சித்தரிக்கப்படுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடக நிறுவனமொன்றின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய மக்களிடையே மொழியால் நெருங்கிய உறவு காணப்படுகிறது.

இருநாட்டு தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது. ஏனெனில் அது இயற்கையானதொன்றாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கை தமிழ் மக்கள் மீதான எமது கரிசனை என்பது தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டதொன்றாக இருக்க முடியாது.

இதனை தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனையோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர் மீதான கரிசனை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்து தேர்தல் நிறைவடைந்த மறுநாளிலேயே முடிவடைகின்ற விடயமாகி விட கூடாது .

ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரித்து , பின்னர் அது தணிந்து போயுள்ளதை அவதானத்திருக்கின்றோம் என குறிப்பிட்டார்.