சுதந்திரக் கட்சியை கடுமையாக சாடும் பொதுஜன பெரமுன – காரணம் என்ன ?

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சி தனிப்பட்ட கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமையவே செயற்பட வேண்டும். தனிப்பட்ட பகைமையை கருத்தற் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள் என சமுர்த்தி, மனைபொருளாதார, நுண்கடன் , தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நொச்சியாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் பங்காளி கட்சியினராக இருந்துக் கொண்டு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை குறிப்பிடுவது அவதானத்திற்குரியது.

அரசாங்கம் மக்களின் வெறுப்புக்களை பெற்றுக்கொண்டுள்ளதாக இவர்கள் குறிப்பிடும் கருத்து சமூகத்தின் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் சுதந்திர கட்சியினர் தனிப்பட்ட கொள்கைக்கு அமைய செயற்பட முடியாது.

கூட்டணியின் பொதுக் கொள்கைக்கு அமைய ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும். தனிப்பட்ட பகைமையினை முன்வைத்தே சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கம் தொடர்பில் வெறுக்கத்க்க பேச்சுக்களை குறிப்பிடுகிறார்கள்.