மனித உரிமைகளை பாதுகாப்பதே ஜெனிவா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி – பிமல் ரத்னாயக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பதாகும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் பட்சத்தில் அமெரிக்கா , பிரித்தானியா போன்ற கோத்தாபய ராஜபக்ஷவினால் அதனை செய்ய முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கைக்கு சர்வதேச தொடர்புகள் அத்தியாவசியமானவையாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இனவாதம் , மதவாதத்தின் அடிப்படையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். அதற்காக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.

இவ்வாறு செயற்படும் அரசாங்கம் ஜெனிவா இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக மக்களிடம் போலி பிரசாரங்களை முன்னெடுக்கிறது. எனவே மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை வெற்றி கொள்ள முடியும். ஜெனிவா நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு காணப்படும் ஒரேயொரு வழி மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் ஜெனிவாவில் சார்பான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ள போதிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் அதனை செய்ய முடியாது. நாட்டை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றிய ஜனாதிபதி தற்போது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை பாதுகாக்க தவறியுள்ளார் என்றார்.