உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம் மக்கள் நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருகின்ற மாதம் 4ம் திகதி மீண்டும் உயிர்த்த ஞாயிறு வரவிருக்கின்றது. அந்த சமயம் இந்த தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களுடைய குடும்பங்களுக்கு ஒரு சோகநாளாக அமையவிருக்கிறது.
அன்றைய தினம் புத்தாடையணித்து இறைவனைப் பிரார்த்திப்பதற்காகச் சென்ற மக்கள், என்ன நடக்கப்போகிறது எனத் தெரியாத ஒரு சூழ்நிலையிலேயே அந்த தாக்குதல் இடம்பெற்றது. தேவாலயங்கள் அந்த தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்று இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
அதேபோல உல்லாச விடுதிகள் தாக்கப்பட்டது, வெளிநாட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டது கூட இந்த நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வரக்கூடாது என்பதா அல்லது வேறு திட்டங்களை வைத்துச் செய்தார்களா என்பது தொடர்பில் எந்த செய்தியும் வெளிவரவில்லை.
ஆனால் முஸ்லிம் மக்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக நின்றதனால் தான் இந்த தொடர் தாக்குதலை முறியடிக்க முடிந்தது, தாக்குதல்தாரர்களை கைது செய்ய முஸ்லிம் மக்கள் ஒத்துழைத்தமையால் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.