நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் நுண்கடன் நிதி நிறுவனங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, புதுக்குடியிருப்பு நகரினை சென்றடைந்ததுடன்,
நுண்கடன் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பகிரப்பட்டன.

இதேவேளை, நுண்கடன்களால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நுண்கடனுக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முழங்காவில் சந்தியில் இன்று காலை ஆரம்பமான போராட்டம் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், முழங்காவில் பாடசாலை வரை பேரணியொன்றும் இடம்பெற்றது.

நுண்கடனால் அல்லலுறும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நுண்கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுமார் 28 இலட்சம் பெண்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு , செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துள் பகுதியிலும் நுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் அரசசார்பற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிக வட்டியுடன் வழங்கும் நுண்கடன் திட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இதன்போது கோஷம் எழுப்பப்பட்டது.