ஜனாதிபதி சீனா விஜயம் ? : சீன பாதுகாப்பு அமைச்சரும் இலங்கை வருகிறார் – பின்னணி என்ன ?

வருடப்பிறப்பின் பின்னர் ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணமாக சீன விஜயம் அமையப்பெறவுள்ளது. இந்த விஜயம் எதிர்வரும் மே மாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுப்புறம் இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் கொழும்பு வருகின்றார். இம் மாதம் இறுதி வாரத்தில் குறித்த விஜயம் இடம்பெறவுள்ளதுடன் , இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்றாவது உயர் நிலை விஜயமாக இது கருப்படுகிறது.

அதாவது கடந்த வருடம் ஜனவரியில் சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யூ உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்து இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்திருந்ததார். இதேவேளை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் விவகார உறுப்பினரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளிவிவகார அலுவலகத்தின் பணிப்பாளருமான யாங் ஜீச்சி தலைமையிலான 26 உறுப்பினர்களை கொண்ட குழு கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

இந்த இரு விஜயங்களுக்கு பின்னர் இடம்பெறும் மிக முக்கியமானதும் உயர் மட்ட விஜயமாகவும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் கொழும்பு வருகை கணிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் , தாமரை கோபுரம் மற்றும் துறைமுகர் நகர் ஆகிய முக்கிய சீன திட்டங்களையும் ஜெனரல் வெய் ஃபெங் பார்வையிடவுள்ளார். இதே வேளை இரு தரப்பு இராஜதந்திர முறைகளுக்கு அமைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் ஜெனரல் வெய் ஃபெங் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இலங்கை – சீன உறவு வலுப் பெற்றிருந்ததுடன், நல்லாட்சியில் சற்று வலுவிழந்திருந்தது. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சி பீடமேறிய பின்னர் வலுவிழந்த நிலை மாறி இருதரப்பு உறவுகள் பிராந்திய அரசியலிலும் தாக்கம் செலுத்தும் வகையில் விருத்தியடைந்து வருகின்றது. கடந்த ஆண்டு ஜனவரியில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவிற்கான விஜயத்தை திட்டமிட்டிருந்த நிலையில். , கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பிற்போடப்பட்டது. ஆனால் இந்த விஜயம் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் வாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கை விஜயமானது அனைத்துலகின் கவனத்தை ஈர்த்திருந்தது. குறிப்பாக பிராந்திய சக்தியான இந்தியாவின் பார்வையில் பல்வேறு நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இலங்கை – சீன நவீன உறவிற்கு சுமார் 68 ஆண்டுகால வரலாறு காணப்படுகின்ற நிலையில், 1986ஆம் ஆண்டு அப்போதைய சீன ஜனாதிபதி லி ஸியன்னியான் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பின்னர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின்னரே ஒரு சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது அதுவே முதல் தடவையாக காணப்பட்ட நிலையிலேயே குறித்த விஜயமானது அனைத்துலக பார்வையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அதே போன்றதொரு முக்கியத்துவம் மற்றும் அனைத்துலக பார்வைக்குள் இலங்கை – சீன உறவு மீண்டும் செல்கின்றது. இலங்கையை மையப்படுத்தி சீனா முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுத்துள்ள திட்டங்களான ஹம்பந்தொட்டை துறைமுகம், தாமரை கோபுரம் , துறைமுக நகர் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியென அனைத்திலுமே சீனாவின் கடல்சார் இராஜதந்திர நோக்கங்களே பிரதிபளிக்கின்றன.

இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவை மேலும் வலுவடைய செய்வதனூடாக உத்தேச திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள சீனக்குடாவில் 1,200 ஏக்கர் நிலப்பகுதியை நீண்டகால குத்தகை அடிப்படையில் சீனாவிற்கு பெற்றுக்கொள்ளுதல் போன்ற நீண்டகால எதிர்பார்ப்புகளை ஈடு செய்வதற்கும் இலங்கையுடனான உறவிற்கு பன்மடங்கில் முக்கியத்துவம் கொடுக்க சீனா எப்போதும் தயாராகவே உள்ளது. குறிப்பாக சீனக் குடா திட்டம் 2012 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலிருந்தே மிக ஆர்வமாக சீனாவால் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு விடயமாகும்.

இவ்வாறான திட்டங்கள் ஊடாக பொருளாதார இலக்குகளை விட பாதுகாப்பு நோக்கங்களுக்காக இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி (Defense-related development) உறுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியமான விடயமாகின்றது.

அதேபோன்று சீனாவின் முதலீட்டுத் திட்டமான கொழும்புத் துறைமுக நகரின் நிர்வாக கட்டமைப்பிற்காக நியமிக்கப்படும் தனி ஆணைக்குழுவின் கீழுள்ள சட்ட யோசனைகள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளன.

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446.6 ஹெக்டயரிலுள்ள கொழும்புத் துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகவே காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, ஐவருக்கு மேற்பட்ட, எழுவருக்குக் குறைந்த கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளது.

மேலும் நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்கள், இந்த விசேட பொருளாதார வலயத்திற்குப் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறனதொரு தனி அலகில் உள்நாட்டிற்குள் நிலப்பரப்பு ஒன்ற நிர்வகிக்கப்படுவது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்ளக சட்ட ஒழுங்கு விவகாரங்களுக்கு பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் பெரும் பங்கும் இரு தரப்பு ஒப்பந்தங்களும் காணப்படுவதால் குறித்த நிலப்பரப்பை நீண்ட காலத்திற்கு சீனா பயன்படுத்தலாம். இந்த நிலைமையானது பிராந்திய சக்திகளுக்கு நெருக்கடியாக அமையலாம்.

மறுப்புறம் சீனாவிற்கு அச்சுறுத்தலாகும் வகையில் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் குவாட் திட்டம் இந்து – பசுபிக் கடற்பரப்பின் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் ஏதோவொரு வகையில் இலங்கை உள்வாங்கப்பட்டலோ அல்லது வரையறைக்குள் இருந்து ஒத்துழைப்புகளை வழங்கினாலோ அது சீனாவிற்கு நெருக்கடியை கொடுப்பதாகவே அமையும்.

அதனால் தான் குவாட் திட்டம் குறித்து வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் , இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அதிக அமைதி, சுபீட்சம், மற்றும் பாதுகாப்பை அடைவதற்கான ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடும் ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் குழுவொன்றாக குவாட் இருக்கும் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

திறந்த மற்றும் மீளெழுச்சிதிறனுடைய இந்தோ-பசுபிக் பிராந்தியமொன்றுக்கான அமெரிக்காவின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை முன்னெடுப்பதற்கான தளமொன்றாகவும் குவாட் காணப்படுவதோடு , கடற் பிரயாண சுதந்திரம் மற்றும் பிணக்குகளுக்கு தீர்வு போன்ற அடிப்படைக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் குவாட்டில் இணைவதற்கு இலங்கைக்கு எந்த தடையும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் ஏற்பட கூடிய இவ்வாறான சவால்களுக்கு ஏற்றதுப்போல் இலங்கையில் சில திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு பார்வையில் சீனா தொடர்ந்தும் ஆர்வத்துடன் செயற்படுகிறது. இதன் பிரகாரம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளப்படி ஒரு வரைபிற்குள் நின்று சீனா தற்சார்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு ஏற்றவகையிலேயே அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமையப்போகின்றது. இந்த விஜயத்தின் மிக முக்கிய விடயமாக இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்துவதாகவே அமையும் எனலாம்.