வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
”யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் மூலமாக இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடை தான். இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேயர் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.
குறித்த இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாகக் கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம். அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்னிற்க மாட்டோம்.
இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல. வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.