கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்குப் புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இன்மையால் நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. வடக்கு – கிழக்கு பகுதியில் எமது மக்களுக்குத் தடுப்பு மருந்து என்பது இன்னும் ஏற்றப்படவில்லை. கோவிட் தொற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால் மக்களை நடமாடாமல் செய்வது மட்டுமல்ல.
கோவிட்டை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்தைச் செலுத்தி உலக நாடுகள் வெற்றி கண்டுள்ளது.ஆனால் இலங்கையில் சரியாகத் திட்டமிடப்படவில்லை. யாராவது இலவசமாகத் தடுப்பு மருந்தைக் கொடுத்தால் அரசாங்கம் வாங்குகிறது. இந்தியா, சீனா, ரஸ்யா கொடுத்தால் வாங்குகிறார்கள்.
இலங்கை அரசாங்கம் கோவிட் தடுப்பு மருந்தை வாங்கப் போவதாகச் சொல்கிறது. ஆனால் வாங்குவதற்கான திட்டத்தை, நிதி ஒதுக்கீட்டை இதுவரை செய்யவில்லை. அரசாங்கம் மிகவும் கவலையீனமாக இருப்பதைக் காண முடிகிறது. சும்மா கொடுத்தால் வாங்குகின்ற நிலைமையில் இருக்கிறது.
இது இந்த நாட்டு மக்களைக் காக்கும் திட்டமா என்பது எனது கேள்வி? சீனா கொடுத்த தடுப்பு மருந்தைத் தென்பகுதியில் வழங்குகிறார்கள். வடக்கில் வழங்கவில்லை. வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்பவற்றிலும் தொற்றுக்கள் அதிகரித்துள்ளது. ஏன் தமிழ் பகுதிகளில் இதனை வழங்கவில்லை.
இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ், சிங்களம் என்பதை விடுத்து ஒட்டுமொத்த மக்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. தற்போது 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணம் வருவதாகக் கூறுகிறார்கள். அது போதுமா என்பது தான் எனது கேள்வி? இந்தியா 6 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கினார்கள்.
அது திட்டமிடப்படாத வகையில் 6 இலட்சம் ஊசிகளையும் போட்டு முடித்து விட்டார்கள். முதல் எந்த ஊசியைப் போடுகிறார்களோ இரண்டாவதும் அதையே போட வேண்டும். இரண்டாவது ஊசி இந்தியா கொடுக்கும் மட்டும் 6 இலட்சம் ஊசி போட்டவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பதா? ஆகவே இந்த நாட்டு மக்களின் இறப்பைக் குறைக்க வேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கவில்லையா?
கோவிட்டை கட்டுப்படுத்த பயணத்தடையை போடுகின்ற அரசு, பாடசாலைகளை மூடுகின்ற அரசு, வர்த்தக நிலையங்களை மூடுகின்ற அரசு, வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்று கூறுகின்ற அரசு உலக நாடுகள் வெற்றி கண்ட தடுப்பு மருந்தைப் போட ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இலவசமாகக் கொடுக்கும் போது வாங்கும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.
இது எமது மக்களின் உயிர்கள் மேல் பந்தயம் வைக்கும் செயற்பாடாகவே தெரிகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பாகப் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கூட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் வேலையை நிறுத்தினால் அந்த குடும்பங்கள் கஸ்ரப்படும் என்பது உண்மை. இருந்தாலும் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்படும் பரவல் அந்த குடும்பங்களையும் பதிக்கிறது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடைத் தொழிற்சாலைகள் நடுவண் அரசின் கீழ் உள்ளது. இந்த விடயத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.
கொழும்பில் வாசுதேவ நாணயக்கார அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் சிங்களம், ஆங்கிலம், சைனிஸ் மொழி இருப்பதாகவும், சைனிஸ் மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பேசுகிறார். அவர் தமிழ் மொழியைப் பற்றிக் கதைக்கவில்லை. அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் தமிழ் மொழி ஒழிக்கப்படுகின்ற திட்டம் நடைபெறுகிறது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையையும் சிதைக்கும் நிகழ்வை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. நில அபகரிப்பு, மகாவலி எல் வலயம், பறவைகள் சரணாலயம் எனத் தமிழர்களின் வரலாற்றையும் பூர்வீகத்தையும் சிதைக்கும் செயற்பாட்டை இந்த நிலையிலும் செய்வது கண்டனத்திற்குரியது.
சீனாவிற்குக் கொடுக்கும் கௌரவம் தமிழ் இனம், மலைக மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அவர்களது அடையாளத்தை அழிக்கும் மோசமான செயற்பாட்டைச் செய்கிறது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மீள் உருவாக்கம் என்னும் பெயரில் பத்திரிகையாளர் உட்படப் பலரைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திட்டமிட்டு கைது செய்து வருகின்றார்கள்.
வடக்கு – கிழக்கில் மூன்று தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்குவது அரசின் திட்டமாக உள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் சரி சமனாக நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
புலம்பெயர் தேசங்களில் வாழும் எமக்கு ஒத்தாசை வழங்குகின்ற உறவுகள் வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில், அவர்கள் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.