மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனே இன்று இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.
மேலும், தனது மகனை நேற்றிரவு கைது செய்து கொண்டுசென்று, அடித்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கலாமென உயிரிழந்தவரின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.டபிள்யு.ஜெயந்த தலைமையிலான பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டு இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன் மட்டக்களப்பு குற்றத்தடவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.