பெருந்தோட்ட மக்களின் சுமையை அதிகரித்துள்ள மண்ணெண்ணெய் விலையேற்றம்

மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

2019 ஆம் ஆண்டு குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 24 வீடுகள் முற்றாக எரிந்ததுடன், அந்த வீடுகளில் இருந்தவர்கள் போர்டைஸ் பொது மைதானத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறு வாழ்ந்து வரும் இவர்கள் உணவு சமைப்பதற்கு பெரும்பாலும் மண்ணெண்ணெய் மற்றும் விறகு அடுப்பையே பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்தது.

இந்த விலையேற்றம் விறகு அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தும் தம்மை பெரிதும் பாதித்துள்ளதென ஹட்டன் போர்டைஸ், 30 ஏக்கர் தோட்டத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

பயணத்தடைக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தமக்கு மண்ணெண்ணெய்க்கு மேலும் 7 ரூபா அதிகமாகக் கொடுத்து வாங்கும் வசதி இல்லை எனவும் தெரிவித்தனர்.

கேகாலை – தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாம்பேகம தோட்டத்தில் மக்கள் மின்சார வசதி இல்லாமல் விளக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

கூலித்தொழில் செய்பவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் பிள்ளைகளின் கல்வி பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.