பயங்கரவாதத்தடைச்சட்ட புதிய நடைமுறைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் அல்லது அவரசகால நிலையின்போது கைதுசெய்யப்பட்டவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய நடைமுறைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

‘சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தினத்தை’ முன்னிட்டு சர்வதேச மன்னிப்புச்சபையினால் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் அல்லது அவரசகால நிலையின்போது கைதுசெய்யப்பட்டவர்களைப் புனர்வாழ்விற்கு உட்படுத்துதல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டன. அந்த நடைமுறைகள் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளைப் பொறுத்தமட்டில், புனர்வாழ்வளித்தல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றாலும் அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை. அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையினால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், இந்த நடைமுறைகளை நிறைவேற்றும் அதிகாரமையத்துடன் நெருங்கிய தொடர்பிலிருப்பதும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான புனர்வாழ்வளித்தல் நிலையங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இயங்கின என்பதையும் அங்கு பாலியல் வன்முறைகள் மற்றும் பாலினப்பாகுபாடுகள் உள்ளடங்கலாக எந்தளவிற்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதையும் நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.