முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஹக்கீமுடன் பிரிட்டன் தூதர் பேச்சு!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட் மினிஸ்டர் ஹவுஸில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக பிரிட்டன் தூதுவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவு வழங்கும் என்றும் சாரா ஹல்டன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.