தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்தனர்.
கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கக் கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுவதாக உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சாரா ஹல்டன் மேலும் கூறினார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.