பிரித்தானியா தொடர்பில் சீனா கொண்டுவந்த அறிக்கை! இலங்கையும் கையெழுத்து

பிரித்தானியாவின் மனித உரிமை நிலைமை குறித்து கவலைகளை எழுப்பி, சீனாவால் கொண்டுவரப்பட்ட கூட்டு அறிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் போது இந்த கூட்டு அறிக்கை கொண்டுவரப்பட்டது.

“ஒரு குழு நாடுகளின் சார்பாக பேச எமக்கு மரியாதை உண்டு. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை நிலைமை குறித்த எங்கள் ஆழ்ந்த கவலைகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

கடுமையான இனவெறி, இன பாகுபாடு, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறை ஆகியவை ஐக்கிய இராச்சியத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது” என ஜெனீவாவில் உள்ள சீன தூதுக்குழு அறிக்கையை வழங்கிய பின்னர் தெரிவித்துள்ளது.

“இங்கிலாந்தில் குடியேறிகளின் தடுப்பு மையங்கள் மோசமான நிலைமைகளின் கீழ் இயங்குகின்றன. அத்துடன், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன.

மேலும் மனித உரிமைகளை மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட பிரித்தானியா ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தியுள்ளதாகவும், சீன தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

“மேற்கில் மனித உரிமைகள்: சர்வதேச கண்காணிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்காமை” என்ற கருப்பொருளிலான இணைய வழி கலந்துரையாடலை சீனா, பெலாரஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா இணைந்து ஏற்பாடு செய்தன.

40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

பெலாரஸ், ரஷ்யா, வெனிசுலா, ஈரான், வட கொரியா, இலங்கை உள்ளிட்ட பல, இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.