தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு, கைக்கு கிடைத்த இலகுவான சந்தர்ப்பங்களை நழுவவிட்ட தமிழ், சிங்கள தலைமைகள்.
தவறுகள் மனிதரோடு பின்னிப் பிணைந்தவை. ஒரு சமூகத்தின் தலமை மக்களை நல்வழிப்படுத்த படுத்தி இலக்கை நோக்கி நகர்த்தி செல்ல வேண்டும். அது தவறும் போது பின்னாலுள்ள மக்கள் கூட்டம் ஆபத்தை சந்திப்பதும், உருக்குலைந்து போதும் தவிர்க்க முடியாததே. இதன் அடிப்படையில்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியாகிய ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் அவர்களுடன் நடந்த சிறப்பு நேர்காணல் வீரகேசரி- எஸ்.எஸ்.தவபாலன்
கேள்வி: இலங்கை பல்லின் பன்மொழி பேசுகின்ற மக்களைக் கொண்ட நாடு ஆயினும் இனப்பிரச்சனை மொழிப்பிரசாசனை என்பன தீர்க்கப் படாமல் இருந்து வருகின்றன. அதனை தலமைகள் தவற விடுகின்றனர்? இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
பதில்: இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான இலகுவானதும், ஆரோக்கியமானதுமான சில சந்தர்ப்பங்கள் கடந்த காலத்தில் எமது நாட்டின் தமிழ், சிங்கள, தலைமைகளது கையில் இலகுவாக கிடைத்தபோதும் அவைகள் தவறவிட பட்டுவிட்டன. இது தூதிஸ்டமானதும், சோகத்திற்குரியதுமாகும். அவைகளை துன்பியல் சம்பவங்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.
அவை இப்போதைய இரு இனம் சார்ந்த தலைமைகளுக்கும் பல பாடங்களையும் எச்சரிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளன என்பதில் தவறில்லை. அது மட்டுமினறி இப்போதைய அனைத்து இனத்தலைமைகளுக்கும் இனப் பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்பட வெண்டுமென்ற உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளன எனலாம்.
சுதந்திரத்திற்கு முன்னர் 1939ம் ஆண்டுகளில் சமஸ்டி ஆட்சிமுறை என்ற சொற்பதத்தினை சிங்களத் தலைவர்களே முதன் முதலில் உச்சரித்தனர். அந்த நேரத்தில் பிரித்தானியர்களோடு இணைந்து நன்மதிப்பை பெற்றிருந்த தமிழ்த் தலைவர்களான சேர்.பொன்னம்பலம் இராமனாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோர், அதனை கவனிக்கவுமில்லை, அதில் சிரத்தை காட்டவுமில்லை. அப்போது சமஸ்டி ஆட்சிமுறையை ஏறபடுத்தியிருந்தால், இப்போது நாம் நிம்மதியோடு இருந்திருக்கலாம் என்பதை இந்த இடத்தில் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
1948ல் பிரித்தானியாவிடமிருந்து இந்தநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. அச் சுதந்திரத்தினை பெறுவதற்கு பாடுபட்டவர்கள் தமிழ்த் தலைவர்களே. அவர்கள் தமது இனத்தின் எதிர்காலம்பற்றி சிந்தித்திருக்கவேண்டும். சிந்திக்க தவறிவிட்டனர், அங்கேயும் ஒரு தவறு தமிழ்த் தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.
பிரித்தானியாவோடு மிக நெருக்கமாக இருந்த தமிழ் தலமைகள் தம்மினத்திற்காக எவ்வளவோ சந்தித்திருக்க முடியும். அதிலு அவர்கள் நாட்டம் கொள்ளாமல் விட்டு விட்டனர். இது நமக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்ட முதல் நிலையாகும்.
கேள்வி: இந்நாட்டில் ஸ்ரீ.ல.சு.கட்சியை ஸ்தாபித்தவர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா. அவர் அரசியலில் பலவற்றை சாதித்தார் என்றதொரு பெருமை பெற்றவர். அவர் விட்ட தவறுகள் பற்றி கூறுங்கள்?
பதில் : 1952ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எஸ். டப்ளியு. ஆர. டி. பண்டாரநாயக்காவால் தோற்றுவிக்கப்பட்டது. அவரால் எடுத்த எடுப்பில் வெற்றிகண்டு அரசை அமைக்க முடியவில்லை. 1956ல் நடாத்தப்பட்ட தேர்தலில் தான் ஆட்சி அமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் சிங்கள மொழியே இந்த நாட்டின் அரச கரும மொழி என்ற ஒரு நீதியற்ற வாக்குறுதியை மக்களுக்கு கொடுத்தே ஆட்சிக்கு வந்தார்
அதன் பிற்பாடு அவர் 1957ல் தந்தை செல்வாவோடு ஒப்பந்தமொன்றினை செய்து கொண்டார். அவ் ஒப்ந்தத்தினை சிங்கள மக்களும், ஒரு சில அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. இவ்விடயத்தில், குறிப்பாக ஜே.ஆர்.போன்றோரை குறிப்பிடலாம், ஜே.ஆர். அதனை எதிர்த்து கண்டிக்கு பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த நிலையில் பண்டா அந்த ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்தார். அவர் ஒரு ஒக்ஸ்போட் பல்கலைக் கழக கல்வியியலாளன், நல்ல பேச்சாற்றலுள்ளவர் அப்படியான ஒருவர் இரு தரப்பினர் கைச்சாத்திட்ட ஒப்ந்தத்தனை மாற்றுத் தரப்போடு கலந்துரையாடாமல் கிழித்தெறிவதென்பது எவ்வளவு அநாகரீகமானது, பாரதூரமானது என்பது சாதாரணமானவர்களுக்கே புரியும். ஆனாலும், பண்டா அதுபற்றி கவலை கொள்ளவில்லை.
கேள்வி: தமிழருக்கெதிரான இனக்கலவரம் பற்றி ?
பதில் : அதற்கு பிற்பாடு 1958ல் தமிழருக்கு எதிரான வன்முறை உருவானது. அது தமிழினத்தை பலவகைகளிலும் பாதித்திருந்தது. தமிழினத்தின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் உலைவைக்கப்பட்டன. பண்டா தான் பாரிய தவறுவிட்டதை உணர;ந்து கொண்டார். பின்னர் 1959ல் அவர் புத்திரகித்தர தேரர், சோமவார தேரர் என்ற இரு புத்த துறவிகளினால் படுகொலை செய்யப்பட்டார்,. இதுவே நமது நாட்டில் நடந்த முதலாவது அரசியல் படுகொலையாகும்.
கேள்வி: டட்லி சேனநாயக்காவின் ஆட்சி பற்றி ?
பதில் : இதன் பிற்பாடு 1965ல் டட்லி சேனனாயக்கா அரசாங்கத்தினை அமைத்தார். அவரது அரசுக்கு தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கியது. அப்போது டட்லி-செல்வா ஒப்பந்தம் உருவானது. அதில் மாவட்ட சபையை மையப் படுத்தி அதிகாரப் பகிர்வு என அந்த ஒப்பந்தத்தில்; குறிப்பிடப்பட்டிருந்தது. அதுவும் காலப்போக்கில் சிங்களத் தலைவர்களால் காலம் கடத்தப்பட்டது. ஆனால் ஆட்சி நடந்தது, ஆட்சி நடந்தபோதும் தமிழர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. வேறுவழியின்றி தந்தை செல்வா தமது கட்சியின் ஆதரவை விலக்கிக் கொண்டார். இது டட்லி சேனனாயக்கா விட்ட தவறு.
கேள்வி: 1970ல் ஸ்ரீமாவோ அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி இன்னும் சில சிறு கட்சிகளோடு ஆட்சிக்கு வந்தார்; அவர் விட்ட தவறுகள் பற்றி?
பதில் : 1970ல் ஸ்ரீமாவோ அம்மையார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்தி இன்னும் சில சிறு கட்சிகளோடு ஆட்சிக்கு வந்தார்; நல்ல ஆட்சிப் பலம் அம்மையாருக்கு இருந்தது. புதிய அரசியல் அமைப்பொன்றினை ஆக்கினார்;. அச்செயற்பாட்டின்போது ஆகக் குறைந்த பட்சக் கோரிக்கையாக ஆறு அம்சக் கோரிக்கைகள் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டது. வடகிழக்கில் தமிழ்மொழியில் நிர்வாகம், இன விகிதாசாரப்படி வேலைவாய்ப்பு,. வடக்கு கிழக்கிலுள்ள நீதி மனறங்களில் தமிழ் மொழியில் நிர்வாக நடை முறை, வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல் என்ற சாதாரண கோரிக்கைகளாக அவைகள் இருந்தன. ஆயினும் அவைகள் எதுவுமே உள்வாங்கப் படவில்லை. இது ஸ்ரீமா அம்மையார் விட்ட பாரிய தவறு.
இந்த அரசியலமைப்பில் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கக் கூடியதாய் இருந்தபோதிலும் வேண்டுமென்றே தமிழ்த்தரப்பினர்களின் கோரிக்கைகள் ஒதுக்கப்பட்டன. இன்று அவைகளின் தாக்கத்தை சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல முழு நாடுமே உணர்கிறது.
கேள்வி: 1977ல் இந்நாட்டில் சிறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியவர் ஜே. ஆர் மூளை சாலி என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. அவரது ஆட்சியில் பலவற்றை சந்தித்தனர் சாதித்தனர் என்ற பெருமையும் உண்டு. அவர் விட்ட தவறுகளைப் பற்றி கூறுங்கள்
பதில் ஜே. ஆர் சிறந்த ஒரு சிறந்த மூளை சாலியாக இலங்கை மக்களால் பேசப்பட்டாலும் அவர் பண்டாரநாயக்காவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காகவும் நாட்டு மக்களை தவறாக திசை திருப்பியது இங்கு குறிப்பிடலாம். இவ்விரு தலைவர்களும் தங்களது சிந்தனைக்கு எடுத்தது தங்களது பதவிக்காக மக்களிடத்தில் பொய்யுரைத்து திசை திருப்பியது மட்டும்தான். அவர்கள் விதைத்த மொழிபேதமும் இனபேதமும் இப்போது வெவ்வேறு வடிவில் பரிமாணம் பெற்று இன்று உலகத் தலைவர்கள் கூடுகின்ற ஐ.நா சபை வரை சென்று இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
இந்த தலைவர்களுக்கெல்லாம் நாடும் நாட்டு மக்களும் எதிர்காலத்தில் சந்தோஷமான சுபிட்சமான பொருளாதார அபிவிருத்தியோடு உலக நாடுகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்பது மனதை வாட்டுகிறது. இப்போது உள்ள தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இதைக் கூறினால் பலர் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.
கேள்வி : இந்திய அரசின் பங்களிப்போடு உருவான வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்து ?
இதற்குப் பிற்பாடு நாட்டில் மெதுமெதுவாய் ஒரு “களேபர” ஆட்சி தமிழ் மக்களின்மீது நடத்த ஜே. ஆர் அரசு தொடங்கிற்று. அது 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு வித்திட்டது. இந்தியாவின் பாரிய பங்களிப்பு அதற்கு இருந்தது. அது அக்காலத்தில் தமிழரின்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தினை நிறுத்தியது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் அசாத்திய துணிச்சல் என்றுதான் அதனை கூறமுடியும். அது முற்று முழுதான அம்சங்கள் கொண்ட ஒப்பந்தமல்ல என்றாலும், வடக்கு கிழக்கை இணைக்கும் சரத்திற்கு அதில் ஒரு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதனை இந்திய நாட்டின் உதவியோடு செய்து முடித்திருக்கக் கூடிய வாய்ப்பு தமிழ்த் தலைமைகளுக்கு இருந்தது. தனித் தமிழ்நாடு என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தரப்பு மனதினில் வளர்த்துக் கொண்டதால் அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை. இது தமிழ்த்தரப்பினர் விட்ட தவறு. அதன் விளைவை இன்று சந்திக்கிறோம்.
கேள்வி: சந்திரிகா அம்மையாரின் ஆட்சி பற்றி ?
பதில்: இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வந்த இந்திய அமைதி காக்கும் படையை எதிர்த்தோம். அதனால் பலவகையான வேண்டாத விளைவுகளை சந்தித்தோம். இதன் பின்னாலே சந்திரிக்கா அம்மையார் ஆட்சிக்கு வந்தார். அம்மையாரை ஆட்சியில் அமர்த்தியதற்கு வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் காரண கர்த்தாவாக இருந்தார்கள். அம்மையார்; இதய சுத்தியோடு தமிழ் மக்களுக்காக சிலபல நன்மைகளை செய்ய முன்வந்தார். அதில் பிரதானமாக வடகிழக்கை ஒன்றிணைத்து ஒரு பிராந்தியமாக்க முன்வந்தார். கலைக்க முடியாத பிராந்திய அரசு என்பதை அத்திட்டத்தில் உட்புகுத்தினார்; இதற்கு உந்து சக்தியாக இருந்தவர; கலாநிதி நீலன் திருச்செல்வமாகும் அதுவும் காலப் போக்கில் பரிதாபக்கிடங்கிற்குள் புகுந்து கொண்டது. இது யாருடைய தவறு என்பதை பரிந்து கொள்ள முடியும்.
கேள்வி : நோர்வே மத்தியஸ்தம் , சமாதானம் பற்றி ?
இந்தநிலையிலேயே எம்மோடு நோர்வேயின் சமாதானத்துவமும் அதன் நடவடிக்கைகளும் எமக்கு 2005ல் கிடைத்தன அவர்களின் முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் நாம் பரிசீலிக்கக்கூட கையிலெடுக்கவில்லை. அவர்களை வைத்தே காரியங்கள் சிலவற்றை நகா;த்தியிருந்திருக்க முடியும். அதனை கையாள அனுமதிக்கப்படவில்லை. இருதரப்பாருக்கிடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டுமாயின் இவ் இருதரப்புக்களும் பிடித்தபிடியில் நிற்கக்கூடாது இறங்கி வரவேண்டும். விட்டுக் கொடுக்க வேண்டும். இதய சுத்தி வேண்டும். அப்போதுதான் அவைகள் நடைமுறைச் சாத்தியமானதாய் மாறும். அவைகள் எல்லாமே இருக்கின்றன. அப்படி இருந்தாலும் இவைகளை கையாளக்கூடிய தலைமைத்துவம் வேண்டும். அப்போதுதான் அவை நடைமுறைப் படத்தப்படும்.
கேள்வி: இப்போது இந்நாட்டில் பௌத்தத் துறவிகள் அரசுக்கு ஆலோசனை கூறி வருகிறார்கள். அதை அப்படியே அரசு ஏற்கின்றது என்பதற்கு அப்பால், தமிழர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். இதுபற்றி?
பதில்: அரசுக்கு ஆலோசனை கூறுபவர்கள் பலர் இனவாத கருத்துக்களை முன்னிறுத்தி இந்த அரசை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களே. இப்படிப்பட்ட துறவிகள் காலத்துக்கு ஏற்ற ஆலோசனைகளை முன்வைப்பார்கள் ஆயின் அவை வரவேற்கத்தக்கவை. நாட்டிற்கும் பிரயோசனமானவையாக இருக்கும்.
நமது நாட்டை பூகோள அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது. ஆகவே பூ போல அரசியலுக்கு ஏற்றாற்போல் அல்லது அவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை தவிர்த்துக் கொள்வதற்கு ஏதுவான ஆலோசனைகளை முன்வைப்பது பலன் தரும். இதற்கு நல்ல உதாரணம் ஒன்றை முன்வைக்கலாம். இலங்கை அரசு துறைமுகத்தின் ஒரு பகுதியை சீனாவிற்கு வழங்கியுள்ளது. இதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேநேரம் இந்தியாவும் தனக்கு ஒரு பகுதியை தருமாறு கூறியது. அதற்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. இதை அரசு பல வியூகங்களை பார்க்க தவறி விட்டது. இதனால் உலக நாடுகளில் இந்தியாவும் அதற்குச் சார்பான நாடுகளும் இலங்கையை எதிர்க்கின்றனர். இதன் பிரதிபலிப்பு ஐநா சபையும் தாண்டி எமது நாட்டின் மீது எதிரொலிக்கிறது. இது நம் நாட்டுக்குப் பல பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சூழலை இலகுவாக எடை போட முடியாது. அரசுக்கு புத்தி கொண்டவர்கள் யாராக இருந்தாலும் உணர்வுபூர்வமாக புத்தி கூறுவதைவிட தாங்கள் சொல்லப்போகும் புத்திமதிகளின் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தே செயலில் இறங்க வேண்டும். உணர்வுபூர்வமாக புத்தி சொல்லும் தவறை தொடர விடாது தடுக்க வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாட்டில் முதல் முதலாக தமிழினத்திற்கு சாதகமாக எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அரசியல் படு கொலை செய்தவர்களும் புத்தபிக்குகளே என்பதை யும் நினைவிற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு எதிராகவும் சாதகமாகவும் பெளத்த துறவிகள் குரல் கொடுத்து வருகின்றனர். சில பௌத்த துறவிகள் தமிழர்கள் இந்நாட்டின் தேசிய இனத்தினர் அவர்களுக்கு இந்நாட்டு அரசியலில் பங்கு இருக்கிறது, அவர்கள் முன்வைக்கும் நியாயமான அரசியல் கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும் அதுவே தர்மம் என கூறிவருகின்றனர். தேசிய ஒற்றுமைக்கு முன் நிற்பவர்களுக்கு நமது நாட்டு மக்கள் இனம் மதம் மொழி பிரதேசம் பாராமல் அங்கீகாரம் வழங்க வேண்டும். இதை இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் செய்யத் தவறி விடுகின்றனர்.
கேள்வி: தமிழ்ர்களுக்கான தலைமைத்துவம் பற்றி ?
பதில் : எமது இப்போதைய தமிழ்த் தலைமையைப் பொறுத்தவரை நம்பகத்தன்மை. 40வருட கால பாராளுமன்ற அரசியல் அனுபவம். வேற்றுக் கருத்துள்ளவர்களை தமது பக்க நியாயங்களை ருசுப்படுத்தி தம்பக்கம் ஈர்க்கக்கூடிய ஆற்றல், அரசியல் முதிர்ச்சி எனபன நிறைந்திருக்கிறது. சமகாலத்தைய நமது அரசியல்வாதிகளுக்குள் இத்தனை திறமையும் கொண்டவரொருவரை தேடிப்பிடிப்பது முடியாத காரியம். ஆதலால், தமிழர் தரப்புக்கு நல்ல தலைமை கிடைக்க வேண்டும் அப்போதுதான் திட்டங்களும், செயற்பாடுகளும் நடைமுறைச் சாத்தியமானதாய் மாறும். தமிழர்கள் தமது தலைமையில் முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். வீணான உபத்திரவங்களை தலைமைக்கோ, கட்சிக்கோ ஏற்படுத்தலாகாது. தமிழ் மக்கள் சமகாலதைய அரசியல் நிலவரங்களை நன்கு புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்;. அதற்கு கடந்த காலத்தில் விட்ட தவறுகளிலிருந்த ஒரு படிப்பினையை பெற்றுக் கொள்வதில் தவறில்லை.
முக்கியமாக தமிழினம் எதிர்கொண்டிருக்கும் பன்முக பிரச்சனைகளை எதிர்கொள்ள அரசியல் தலைமைகள் ஒருமித்த நிலைப்பாட்டில் விடயங்களை கையாளத் துணியவும் தொடங்கவும் வேண்டும். இதுதான் தமிழினத்திற்கு தலைமைகள் செய்யக்கூடிய காத்திரமான பணியாகும்.