மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பக்தர்களுடன் இம்முறை இடம்பெறும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் இம்முறை 150 பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மன்னார் மடுத் திருத்தலத்தில் இன்று புதன்கிழமை(11) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலாளர் அ.ஸ்ரான்லி டிமெல் தலமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வர், மடுத் திருத்தலத்தின் பரிபாலகர், சுகாதாரத் துறையினர், பொலிஸார், இராணுவத்தினர், கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு அமைவாகத் திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.
மடு அன்னையின் வடாந்த ஆவனித் திருவிழா¸ எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறும். எதிர்வரும் ஆவணி-14 ஆம் திகதி மாலை-06 மணிக்கு விசேட நற்கருணை, ஆராதனை இடம்பெற்றுத் தொடர்ந்து நற் கருணை ஆசீர்வாதமும் நடைபெறும்.
மறுநாள்¸ காலை-6.15 மணிக்கு மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும். திருவிழாத் திருப்பலி சிலாபம் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். தமிழ்¸ சிங்கள மொழிகளில் மறையுறைகள் இடம்பெறும். திருவிழா தினத்தன்று மேலும் மூன்று திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மாத்திரம் கலந்து கொள்ள முடியும். கொவிட் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் இம்முறை திருவிழாவிற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மேலும் தெரிவித்தார்.