மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் உடல் நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை(13-08-2021) இரவு சிவபதமடைந்தார்.
சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மதுரை ஆதீனம் கடந்த ஆகஸ்ட்- 09 ஆம் திகதியன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை(12) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு நேற்று(13) வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கைச் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு-9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றிச் சிவபதமடைந்தார்.
தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் மதுரை ஆதீனம்.
சிறந்த தமிழ்ப் புலமையும், பன்மொழிப் புலமையும், கணீர் என்ற குரல் வளமும், பேச்சாற்றலும் மிக்கவராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் திகழ்ந்தார்.
காஞ்சி சங்கர மடத்துக்கு நேர் எதிரான ஆதீனமாக ஓர் நவீன வரலாற்றைத் தொடங்கி வைத்த சைவப் பெரியார் குன்றக்குடி அடிகளாரைப் போல வடமொழி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு போன்ற தமிழ்மண்ணுக்கே உரிய சிந்தனைகளை கொண்டவராக இறை பணியாற்றியவர்.
தமிழ்மொழி, மண், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் மதுரை ஆதீனம்.
இதேவேளை, கடந்த-2019 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் முடிசூட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தான் மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.