புதிய வெளியுறவு கொள்கை ஊடாக மாற்றத்தை நோக்கி இலங்கையை நெறிப்படுத்த நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முற்படும் அதே சமயம் இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை நெருக்கமாக அரவணைக்கவும் சீனாவையும் நட்பு வலயத்தில் வைத்திருக்கவும் முற்படுவதாக கொழும்பை தளமாக கொண்டியங்கும் இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆரோக்கியமாக கையாள்வதன் ஊடாக மாத்திரமே குறித்த நாடுகளுடன் மீண்டும் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த முடியும் என்பதுடன் செப்டெம்பர் மாதம் ஜெனிவா சவால்களை கையாள்வதற்குமாகவே வெளிவிவகார அமைச்சில் திடீர் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த மே மாதம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் சந்தித்திருந்தார்.
மறுப்புறம் அமெரிக்க சென்ற பஷில் ராஜபக்ஷ வாஷிங்டனில் சந்திப்புகளை நடத்தியிருந்தார். தனிப்பட்ட விஜயமாக அமெரிக்கா சென்றிருந்ததாக கூறப்பட்டாலும் பெஷில் ராபக்ஷ நாடு திரும்பியதும் அவருக்கு நிதியமைச்சு பதவி வழங்கப்பட்டது.
நிதி அமைச்சராக பொறுப்பேற்றதன் பின்னர் கெரவலப்பிட்டி திரவ இயற்கை வாயு மின் திட்டம் அமெரிக்காவிற்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மறுபுறம் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தில் சீனாவின் ஆதிக்கங்கள் குறித்து பிராந்திய அளவில் பேசப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கை சார்ந்த பல நாடுகளுக்கும் துறைமுக நகர் திட்டத்திற்கு உள்வாக்கப்படுவதற்காக சூழல் ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையுடன் திரைக்கு பின்னால் மனகசப்பினை கொண்டிருக்க கூடிய நாடுகளை சமாதானப்படுத்தும் வகையில் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ செயற்பட ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுடனான உறவுகளை புதிப்பிக்கும் வகையிலான செயற்பாடுகளை பெஷில் ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.
இதில் முக்கியதொரு வெற்றியாகவே மிலிந்த மொரகொட டெல்லியில் இலங்கையின் உயர்ஸ்தானிகராக பதவியேற்றார். ஏனெனில் மிலிந்த மொரகொடவின் நியமனத்தை டெல்லி நீண்ட நாட்கள் ஏற்காதிருந்தது.
ஆனால் அந்த நிலை மாற்றமடைந்து கொழும்பு – டெல்லி உறவுகளை மீள்புதுப்பிக்கும் வகையில் பல திட்டங்களை மிலிந்த மொரகொட தற்போது முன்னெடுத்து வருகின்றார். கல்கத்தாவிலும் துணை உயர்ஸ்தானிகராலயமொன்றை அடுத்த ஆண்டில் ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டெல்லியில் இலங்கையின் தலைமை உயர்ஸ்தானிகராலயம் உட்பட சென்னை மற்றும் மும்பாயில் இரு துணை உயர்ஸ்தாணிகராலயங்கள் உள்ள நிலையிலேயே நான்காவதாக கல்கத்தாவில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவை தவிர்த்து ஏனைய பன்னாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள பின்னடைவுகளை மீள்சரி செய்யும் போக்கினை பெஷில் ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.
இதன் போது தமிழ் மக்களின் அரசியல் மற்றும் மனித உரிமைகளின் பொறுப்புக்கூறல் குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவத்தில் கொண்டுள்ளமையினால் அந்த விடயங்களை கையாள்வதற்கு பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு கைமாறுவதற்கும் இதுவே காரணம். மறுப்புறம் ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு நிறுத்தப்படவும் , பெஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அந்த சந்திப்பு இடம்பெறவும் மிக நெருக்கமான தொடர்புகள் உள்ளன.
எனவே ஒரு புதிய மாற்றத்தை நோக்கி இலங்கையை நெறிப்படுத்த பெஷில் ராஜபக்ஷ முற்படுகிறார். இந்தியா , அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளை நெருக்கமாக அரவணைக்கும் அதே சமயம் சீனாவையும் நட்பு வலயத்தில் வைத்திருக்க முற்படுகிறார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே கொழும்பு துறைமுக திட்டத்தின் முறைப்படுத்தல் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சீன பிரதமர் லீ கெகியாங் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை வருகின்றார்.